மலேசிய ஊடகவியலாளர் நியூஸிலாந்தில் கௌரவிக்கப்பட்டார்

முன்னாள் மலேசிய ஊடகவியலாளரான குருநாதன் நியூஸிலாந்தின் இந்திய வாழ்த்தரங்கில்(Kiwi Indian Hall of Fame) சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் ‘கப்பிட்டி’ மாவட்ட மேயராக இரு முறை பொறுப்பேற்றிருந்த அவருக்கு அண்மையில் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்த கௌரவிப்பு நல்கப்பட்டது.

நியூஸிலாந்தின் மேம்பாட்டுக்கான பங்களிப்பில் சிறந்து விளங்கும் அந்நாட்டு வாழ் இந்தியர்களுக்கு அதன் பிரதமர் தலைமையில் இவ்விருது நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

நியூஸிலாந்து நாட்டுக்கு குடிபெயருவதற்கு முன் கோலாலம்பூரில் ‘தி சன்’ பத்திரிகையிலும் ‘ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிலும் பணியாற்றியுள்ள குருநாதன் ஜ.செ.க.வின் ‘ரோக்கெட்’ இதழுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார்.

கடந்த 1970ஆம் ஆண்டுகளில் ஆக்லாந்து நகரில் உயர் கல்வியை மேற்கொண்டிருந்த அவர் அச்சமயத்தில் மாணவர் அரசியலிலும், ‘மவுரி’ இன உரிமை போராட்டங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

கடந்த 1980களில் தென் ஆப்பிரிக்காவின் இன ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் 1981ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க ரக்பி விளையாட்டுக் குழு நியூஸிலாந்துக்கு வருவதை தடுக்கும் இயக்கத்திற்கு தலைமையேற்றது மறக்க முடியாத ஒன்று என 71 வயது குருநாதன் நினைவு கூர்ந்தார்.

நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்தஃபர் லக்ஸனிடமிருந்து தனது விருதை பெற்றுக் கொண்ட அவர், அந்நாட்டு வாழ் இந்திய சமூகத்தின் வளமான எதிர்காலத்திற்கு தன்னால் இயன்ற சேவையாற்றுவதில் பெருமை கொள்வதாக கூறினார்.

மலேசியாவின் இன ஒதுக்கீட்டு முறையினால் உயர் கல்வி பெற தனக்கு வாய்ப்பில்லாமல் போனது என்றும் திறன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கிய நியூசிலாந்துக்கு நன்றி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(தமிழாக்கம:இராகவன் கருப்பையா)