கிளந்தானில் வெள்ள நிலைமைகுறித்து பிரதமர் நாளை ஆய்வு செய்கிறார்

தற்போது மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள வெள்ள நிலைமையை நேரில் பார்வையிடப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாளைக் கிளந்தானுக்குச் செல்கிறார்.

நேற்று பூக்கெட்டில் ஸ்ரேதா தாவிசினுடன் சந்தித்ததைத் தொடர்ந்து அன்வர் இந்தத் தகவலை முகநூல் பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

“தற்போதைய வெள்ள நிலைமை குறித்தும் நாங்கள் விவாதித்தோம்,  நாளைக் கிளாந்தனுக்குச் சென்று அங்கு அதிகரித்து வரும் கவலைக்குரிய சூழ்நிலையைத் தனிப்பட்ட முறையில் மதிப்பிடுவேன். இந்தப் பேரழிவை இறைவன் விரைவில் நீக்கட்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று இரவு பதிவான 4,967 குடும்பங்களைச் சேர்ந்த 15,994 பேருடன் ஒப்பிடும்போது, ​​காலை 8 மணி நிலவரப்படி, மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,510 குடும்பங்களைச் சேர்ந்த 17,466 நபர்களாக அதிகரித்துள்ளது என்று கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் இன்று அறிவித்துள்ளது.

பாசிர் மாஸ், தனாஹ் மேரா, ஜெலி, குவா முசாங், குவாலா க்ராய், மச்சாங், பாசிர் புதே மற்றும் கோட்டா பாரு ஆகிய எட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது 89 தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், ஸ்ரேத்தாவுடனான தனது முறைசாரா சந்திப்பின்போது, ​​மலேசியா மற்றும் தாய்லாந்தில் சுற்றுலா தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல முக்கிய விஷயங்களையும் அவர்கள் விவாதித்ததாக அன்வார் கூறினார்.