கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர், போலீசாருடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்

இன்று அதிகாலை மச்சாங் புபோக்கில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆயுதமேந்திய கொள்ளைகள் மற்றும் 16 குற்றப் பதிவுகளில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் காவ் கோக் சின் கூறுகையில், தீவிர குற்றப் பிரிவின் (D9) குழு, நள்ளிரவு 12.35 மணியளவில் சுங்கை லெம்புவை நோக்கிச் சென்ற புரோட்டான் எக்ஸ்70 வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு ஓட்டுநர் நடந்துகொண்டதைக் கவனித்ததாகக் கூறினார்.

“அவர்கள் டிரைவரை நிறுத்துமாறு அறிவுறுத்தினர், ஆனால் அந்த நபர்  வேகமாகக் காரை நோக்கிப் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்”.

“எங்கள் குழுவினர் அவரைச் சுமார் 200 மீற்றர் தூரம் துரத்திச் சென்றதையடுத்து, சந்தேகநபரின் வாகனம் வீதியின் ஓரத்தில் மோதி விபத்துக்குள்ளானது,” என அவர் இன்று தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.

காரிலிருந்து இறங்கிய அந்த நபர் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகக் காவ் கூறினார்.

அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பினாங்கில் வசிக்கும் 44 வயதுடைய சந்தேக நபர் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் மேலாக்கா ஆகிய இடங்களில் பல கொள்ளைக் குற்றங்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

சந்தேக நபர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் பயன்படுத்தப்பட்ட வாகனப் பதிவு எண் போலியானது எனச் சோதனையில் கண்டறியப்பட்டதாகக் காவ் கூறினார்.