பிரதமர்: துபாய் நகர்வால் எந்தப் பாதிப்பும் இல்லை, முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துவோம்

பிரதமர் அன்வார் இப்ராகிம் தனது நிர்வாகத்தைக் கவிழ்க்க சமீபகாலமாகச் சதித்திட்டம் தீட்டியது குறித்த கவலைகளைத் துடைத்துள்ளார்.

” Dubai Move” என்று அழைக்கப்படும் அத்தகைய சதி இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அதற்குப் பதிலாக மக்களுக்குத் தனது கடமையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

“துபாய் நகர்வுபற்றி நான் அறிந்திருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நாம் நம் வேலையில் கவனம் செலுத்த வேண்டும்”.

“அவர்கள் என்ன வேலை செய்தாலும், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மிக முக்கியமானது என்னவென்றால், ஜனவரி 2 ஆம் தேதி, மக்களுக்கான ஒரு முக்கியமான திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்,”என்று அவர் இன்று மத்திய தரவுத்தள மையத்தை (Padu) தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, துபாய் நடவடிக்கை இருப்பதை உறுதி செய்தார், இது எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இன்று காலைப் புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அம்னோ தலைவர் கூறினார்.

இருப்பினும், மலேசியர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு தங்கள் ஆணையை வழங்கியிருப்பதால், அத்தகைய நடவடிக்கை நேரத்தை வீணடிப்பதாக அவர் கூறினார்.

சதியில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களைக் கேட்டபோது ஜாஹிட் வெளியிட மறுத்துவிட்டார்.

மாறாக, புதிய அரசாங்கத்தை அமைக்க விரும்பினால் அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

PN சதியை மறுக்கிறது

துபாய் நகர்வு சமூகத் தொடர்புத் துறையின் (J-Kom) துணை இயக்குநர் ஜெனரல் இஸ்மாயில் யூசோப்பால் முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

United Arab Emirates (UAE) பெரிகாத்தான் நேஷனல் தலைவர்கள் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த சமீபத்திய விடுமுறையின்போது இந்தத் திட்டம் உருவானது என்று அவர் கூறினார்.

தூண்டுதல்களுடன் எதிர்க்கட்சிக்குத் தங்கள் ஆதரவை மாற்றக்கூடிய எம்.பி.க்களை அடையாளம் காணும் பொறுப்பான “முகவர்களுக்கு” குறிப்பிட்ட பணிகளை ஒதுக்க ஒரு கூட்டம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

PN பின்னர் அத்தகைய சதி இருப்பதை மறுத்துள்ளது.