இராகவன் கருப்பையா – இந்நாட்டில் நம் சமூகத்திற்கான அரசாங்கத்தின் உருமாற்றுப் பிரிவான ‘மித்ரா’ இன்னமும் நிலையான ஒரு இருப்பிடம் இல்லாமல் அங்கும் இங்கும் பந்தாடப்படுவது வேதனைக்குரிய ஒரு விஷயம்.
அந்த பிரிவு கடந்த காலங்களில் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் இத்தகைய அவலம் ஏற்பட வாய்ப்பில்லை என உறுதியாகச் சொல்லலாம். முறையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றை அனாவசியமாக அலைக்கழிக்க யாருக்கும் துணிச்சல் இருக்காது தேவையும் ஏற்படாது.
கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் அட்சியமைத்த போது ஒற்றுமைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட வேதமூர்த்தியின் தலைமையில் அப்பிரிவு இயங்கியது.
பிறகு 2020ஆம் ஆண்டில் பெரிக்காத்தான் கூட்டணி அட்சியமைத்த போது ஒற்றுமைத்துறை அமைச்சராக நியமனம் பெற்ற ஹலிமா சாடிக் அதற்கு தலைமையேற்றார்.
எனினும் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்மாய்ல் சப்ரி பிரதமர் பதவியேற்ற போது ம.இ.கா.வின் பரிந்துரையின் பேரில் அப்பிரிவு பிரதமர் இலாகாவுக்கு கொண்டுவரப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் பக்காத்தான் அட்சியமைத்த போது அதனை நிலைநிறுத்திய பிரதமர் அன்வார், சுங்ஙை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமணனை அதற்கு தலைவராக நியமனம் செய்தார்.
ஏறத்தாழ ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் திடீரென அப்பிரிவை மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கே மாற்றிய அன்வார் அதன் தொடர்பாக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் ‘நெருப்பில்லாமல் புகையாது’ அல்லவா! “அரசாங்கம் வழங்கிய 100 மில்லியன் ரிங்கிட்டை முறையாக செலவு செய்தோம். கடந்த காலங்களைப் போல மீதம் வைக்காமல் மொத்தத் தொகையையும் நம் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப செலவு செய்தோம்” என ரமணன் பெருமிதம் கொண்ட போதிலும் பதிலளிக்கப்படாத கேள்விகள் நிறையவே உள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த நிதி முறைகேடுகளைப் போல இப்போது நடந்திருக்க வாய்ப்பில்லை எனும் போதிலும் முறையான திட்டமிடல் இல்லாததால் நிதி நிர்வாகம் நியாயமாக மேற்கொள்ளப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
‘மித்ரா’வின் இதர அங்கத்தினர்களாக இருந்த கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், செகாமாட் தொகுதியின் யுனேஸ்வரன் மற்றும் சிவராஜ் போன்றோரின் யோசனைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்காமல் ஓரிருவர் மட்டுமே தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் பள்ளி மாணவர்களை, புதுப்பிக்கப்பட்ட பழைய கணினிகளை கொள்முதல் செய்து அவர்களுக்கு வழங்கியது, நிதி கேட்டு விண்ணப்பம் செய்த எண்ணற்ற உயர்கல்வி மாணவர்களை உதாசினப்படுத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இக்குழு மீது சுமத்தப்பட்டுள்ளது.
நிதியை முற்றாக முடித்தாக வேண்டும் எனும் வேட்கையில் நாடு முழுவதிலும் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடாக வழங்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம்தான் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதே, அதற்கு மேற்கொண்டு ‘மித்ரா’ ஏன் அரசுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நம் சமூகத்தின் ஆதங்கமாகும்.
இப்படியாக பல்வேறு குறைபாடுகளை அக்குழு சுமந்து நின்ற சமயத்தில்தான் திடீரெனஅன்வார் அதனை ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வந்தார்.இந்நிலையில் அக்குழுவிற்கு தலைமையேற்க ஜ.செ.க. மற்றும் பி.கே.ஆர். கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே போட்டா போட்டி நிலவியதாக அரசல் புரசலாக செய்தி வெளியானது.
தற்போது ஒற்றுமை துறை அமைச்சின் துணையமைச்சர் சரஸ்வதி கந்ததாமி அதற்கு தலைமையேற்றுள்ளதைப் போல் தெரிகிறது. இவ்வாண்டாவது அந்த 100 மில்லியன் ரிங்கிட் முறையாக நிர்வாகம் செய்யப்பட்டு நம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஆக்ககரமான பயனை அளிக்க வேண்டும்.