நஜிப்பின் தண்டனை குறைக்கப்படும் சாத்தியம் – முடிவு இந்த வாரம் தெரியும்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

“(மன்னிப்பு வழங்கும் வாரியத்திடமிருந்து) அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்…  இந்த வாரம் பதில் கிடைக்கும் என்று , நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

கூட்டரசு தினம் மற்றும் புத்ராஜெயா ஓபன் டே 2024 இன்று தொடங்கப்பட்ட பின்னர்,  மன்னிப்பு வழங்கும் வாரியத்தின் உறுப்பினர்   ஜாலிஹா செய்தியாளர்களிடம் கூறினார்.

நஜிப்பின் மன்னிப்பு விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் ஆனால் மன்னிப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்குமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நினைவூட்டியதாகவும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்று தெரிவித்தார்.

சர்வதேச செய்தி ஊடகமான சேனல் நியூஸ் ஏசியா நேற்று நஜிப்பின் சிறைத்தண்டனை 12 வருடங்களில் இருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதாக கூறியது.

திங்கள்கிழமை (ஜனவரி 29) நடந்த மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மூத்த அரசாங்க அதிகாரி உள்ளிட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை கூறியது.

RM42 மில்லியன் SRC இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு காஜாங் சிறையில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் நஜிப்.

  • பெர்னாமா