சூழ்நிலை கைதிகளுக்கும் கருணை காட்ட வேண்டும்!

இராகவன் கருப்பையா – முன்னாள் பிரதமர் நஜிபுக்கு மன்னிப்பு வாரியம் வழங்கியுள்ள சிறப்புச் சலுகைகள் தொடர்பான சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை.

‘உலக மகா திருடன்’ என அமெரிக்க நீதித்துறையே முத்திரை குத்தியுள்ள ஒருவருக்கு ஏன் இந்த கருணை என ஒரு சாரார் கேள்வி எழுப்பும் அதே வேளை, அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினரும் அம்னோ உறுப்பினர்களும் கூறுகின்றனர்.

மன்னிப்பு வாரியம் எதன் அடிப்படையில் இம்முடிவை எடுத்தது என நாட்டு மக்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்று கூட சிலர் வாதிடுகின்றனர்.

நஜிப் ஒரு ‘தேசிய அவமானம்’ என கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பு வழங்கிய போது வர்ணித்தது உலகறியும். நஜிப் குற்றவாளிதான் என நாட்டின் அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கி அவரை சிறையில் அடைத்த போது நீதித்துறையின் ஆற்றலையும் நடுநிலைத்தன்மையையும் பாராட்டி பெருமிதம் கொண்டவர்கள் இப்போது அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் மகாதீர் ஆட்சியின் போது கைது செய்யப்பட்ட நஜிப், முஹிடின் ஆட்சியின் போது  குற்றஞ்சாட்டப்பட்டார். பிறகு சப்ரி ஆட்சியின் போது சிறையில் தள்ளப்பட்ட அவருக்கு இப்போது அன்வார் ஆட்சியின் கீழ் தண்டனையில் 50% கழிவு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னிப்பு வாரியத்திற்கு அப்போதைய பேரரசர்  தலைமையேற்றிருந்ததால் அவ்வாரியத்தின் முடிவை மதித்து, இவ்விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்காமல் அதனை ஏற்றுக் கொள்வதே சிறப்பு.

அதே வேளையில் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் உந்தப்பட்டு சிறிய அளவிலான குற்றங்களைப் புரிவோருக்கும் எதிர்வரும் காலங்களில் கருணை காட்டுவது குறித்து மன்னிப்பு வாரியம் பரிசீலிக்க வேண்டும்.

நஜிப் புரிந்த குற்றம் சர்வதேச நிலையில் வரலாறு காணாத ஆகப் பெரிய திருட்டுச் சம்பவம் என உலகின் பல நாடுகள் வருணித்துள்ளன. அப்படிப்பட்ட ஒருவருக்கே தண்டனையில் 50% கழிவு வழங்கப்படும் போது, பட்டினி கிடந்த தனது கைக் குழந்தைக்காக பால் மாவு திருடியது மற்றும் வறுமையில் வாடிய குடும்பத்திற்கு உணவளிக்க ‘சார்டின்’ திருடியது போன்ற குற்றங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படலாம்.

எந்த நிலையிலும் திருடுவது குற்றம்தான். அதனை நாம் ஊக்குவிக்கவோ அங்கீகரிக்கவோ இல்லையென்ற போதிலும் இது போன்ற சிறு குற்றங்களைப் புரிவோர்  சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு அடிமையாகித்தான் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இத்தகைய குற்றங்களை புரிவோர் சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் தண்டிக்கப்படுகின்றனர் எனும் போதிலும் சிறிது நாள்கள் கழித்து மன்னிப்பு வாரியம் அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளை தீர ஆராய்ந்து அதற்கேற்றவாறு தண்டனைகளில் கழிவுகள் வழங்க ஏற்பாடு செய்யலாம்.

அவர்களில் நிறைய பேர் பி40 தரப்பைச் சேர்ந்த ஒற்றை பெற்றோராக உள்ளனர். வழக்கறிஞர்களை நியமனம் செய்வது கூட அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அவர்கள் திட்டமிட்டு இதுபோன்ற குற்றங்களை புரிவதில்லை. பெரும்பாலும் துரதிர்ஷ்டவசமான ஒரு சூழ்நிலையில்தான் இதற்குள் தள்ளப்படுகின்றனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சிறை சென்றவுடன் வீட்டில் ஆதரவற்ற சூழலில் உள்ள அவர்களுடைய பிள்ளைகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

எனவே இதுபோன்ற குற்றவாளிகளின் இக்கட்டான சூழ்நிலைகளை மன்னிப்பு வாரியம்  மனிதாபிமானத்தோடு அணுகி அவர்களுக்கு உதவ வகை செய்யலாம்.