தமிழ், சீனப் பள்ளிகள் வெற்றி – பெடரல் நீதிமன்றம் நிலைப்பாட்டை உறுதி செய்தது

தமிழ் மற்றும் சீன பள்ளிகள் அரசமைப்புக்கு முரணானவை என்றும் அவற்றின் செல்லுபடியை ரத்து செய்ய மேல்முறையீடு செய்ய இரண்டு அரசு சாரா நிறுவனங்கள்  கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் (பெடரல் நீதிமன்றம்) இன்று தள்ளுபடி செய்தது/

மலேசியாவில் வெர்னகுலர் பள்ளிகள் எனப்படும் தமிழ் மற்றும் சீனப்பளிகள் தொடர்ந்து செயல்படும்.

இன்று காலை மேரி லிம் தியாம் சுவான் தலைமையிலான மூன்று நபர் பெடரல் நீதிமன்ற அமர்வு, 2-1 பெரும்பான்மையில், இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு கவுன்சில் (மாப்பிம்) மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கம் (கபேனா) ஆகியவற்றின் விடுப்பு மேல்முறையீட்டை நிராகரித்தது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் ஆகிய இரண்டு நிலைகளிலும் இந்த எதிர்ப்பு குழுக்கள் தங்கள் சட்ட சவாலில் தோல்வியடைந்ததின் பயனாக இந்த வழக்கு பெடரல் நீதிமன்றம் வரை இழுக்கப்பட்டது.

டிசம்பர் 29, 2021 அன்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி – அப்பீல் நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டவர் – மாப்பிம் மற்றும் கபேனா தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தார்.

நாஸ்லான், தாய்மொழிகளான மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகளின் பயன்பாடு கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்றார்.