திரங்கானு வளர்ச்சிக்காக பெரிக்காத்தானை விட, ஒற்றுமை அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது – அன்வார்

பெட்ரோலியம் உரிமை கட்டணம் ரிம786 மில்லியன் இருந்தபோதிலும், கடந்த ஆண்டு திரங்கானுவின் வளர்ச்சிக்காக ஒற்றுமை அரசாங்கம்  மொத்தம் 1.55 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

நிதியமைச்சராக இருக்கும் அன்வார், பாஸின் கீழ் மாநிலத்தின் வளர்ச்சிச் செலவு இந்த ஆண்டு ரிம1.59 பில்லியனாக அதிகரித்துள்ளது என்றார்.

பெடரல் அரசாங்கத்தில் பாஸ் மற்றும் பெர்சத்துவின் கீழ் இருந்ததை விட அவரது நிர்வாகத்தின்போது திரங்கானுவிற்கான மொத்த பெட்ரோலியம் உரிமை கட்டணம் அதிகரித்துள்ளன, இது 2022 இல் ரிம399 மில்லியனாக மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

“நான் இதை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டேன், இரண்டாவது நிதியமைச்சர் (அமிர் ஹம்சா அஜிசான்) அதை மீண்டும் வலியுறுத்தினார், ஆனால் எதிர்க்கட்சிகள் நாங்கள் கொடூரமாக நடந்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். இது மடானி அரசாங்கத்தின் கொடுமை என்று அவர்கள் கூறுகிறார்கள்”.

“உண்மையில், பெரிக்காத்தான் தேசிய அரசாங்கத்தின் காலத்தைவிட ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் திரங்கானுவுக்கு கூட்டாட்சி ஒதுக்கீடு அதிகமாக உள்ளது,” என்று அவர் இன்று காலை அமைச்சகத்தின் பணியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

கெமாமன் நாடாளுமன்ற உறுப்பினரான திரங்கானு மந்திரி பெசார் அஹ்மத் சம்சூரி மொக்தார், 2023 ஆம் ஆண்டிற்கான எண்ணெய் உரிமை கட்டண கொடுப்பனவுகளில் நிலுவைத் தொகையை விளக்குமாறு மார்ச் 5 அன்று அன்வாரிடம் வலியுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டிற்குள் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான உரிமை கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக மடானி அரசாங்கம் வரலாற்று புத்தகங்களிலோ அல்லது வருங்கால சந்ததியினரிலோ நினைவுகூரப்பட விரும்பவில்லை என்று ஷம்சூரி கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில், திரங்கானு அரசாங்கம் பெட்ரோலியம் உரிமை கட்டணத்தில் ரிம10 மில்லியன் மட்டுமே பெற்றதாகச் சம்சூரி கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொகை 2023 நிதி மசோதாவில் ஒதுக்கப்பட்ட பெட்ரோலியம் உரிமை கட்டணம் அல்லது வாங் எஹ்சானிலிருந்து வேறுபட்டது, அவை மொத்தம் ரிம1.524 பில்லியன்.

வாங் எஹ்சான் திரங்கானு அரசுமூலம் அல்ல, மாநிலத்தில் பொதுத் திட்டங்கள்மூலம் செயல்படுத்தப்படுகிறது என்று அன்வார் இன்று கூறினார்.

“அவசர திட்டங்கள் அல்லது தேவைகள் உள்ளன, எடுத்துக்காட்டாக, தாசிக் கென்யாரில் திட்டத்தை விரைவுபடுத்த நிதி ஒதுக்குகிறோம், அதில் ஒரு பகுதி, வாங் எஹ்சானிடமிருந்து வருகிறது”.

“எண்ணெய் உரிமை  கட்டணத்தைச் சிறு திட்டம், மக்களுக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறோம். அந்தப் பணத்தை மற்ற அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்களுக்குச் செலவிடாமல் அந்தந்த மாநில நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம்.

சபா, சரவாக் மற்றும் கிளந்தான் உள்ளிட்ட பெட்ரோலியம் உரிமை கட்டண மாநிலங்களிலும் இதே அணுகுமுறை பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

-fmt