6 பண்டிகைகள் கொண்டாட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை காட்டுகிறது – அமைச்சர்

மலேசியாவில் கடந்த வாரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆறு கொண்டாட்டங்கள் நாட்டின் பன்முகத்தன்மைக்கு சான்றாகும், இது அதன் மிகப்பெரிய சொத்து என்று தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கூறினார்.

மலேசியாவில் இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை அனைத்து குடிமக்களாலும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான சொத்துக்கள் என்று அவர் கூறினார்.

“கடந்த வாரத்தில் நாட்டில் ஆறு கொண்டாட்டங்கள் அனுசரிக்கப்பட்டதை பலர் உணராமல் இருக்கலாம். மலேசியாவில் உள்ள பன்முகத்தன்மை நம் அனைவருக்கும் மிகப்பெரிய மற்றும் மதிப்புமிக்க சொத்து”.

“மலேசியாவில்தான் நாம் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம். ஹரி ராயா ஐடில்பித்ரி, உகாதி, தமிழ் புத்தாண்டு, வைசாகி, விஷு தினம் மற்றும் சோங்க்ரான் ஆகியவற்றைக் கொண்டிருந்தோம்,” என்று அவர் X இல் கூறினார், அங்குப் பல்வேறு பின்னணியில் உள்ளவர்கள் அந்தந்த பண்டிகைகளைக் கொண்டாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

நேற்று கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்டு பகுதியில் உள்ள லிட்டில் இந்தியாவில் தமிழ்ப் புத்தாண்டை தமிழர்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்வு நாட்டில் உள்ள தமிழ் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு சங்கங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் உள்ள பலதரப்பட்ட சமூகத்தினரிடையே புரிந்துணர்வை வளர்க்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் கே சரஸ்வதி தெரிவித்தார்.