அன்வார் நம் சமூகத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை

இராகவன் கருப்பையா – பொதுத் தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நம் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் இன்னமும் நிறைவேற்றவிலை எனும் குறைபாடு நம்மிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

“இந்திய சமூகத்தை நான் உதாசினப்படுத்தவில்லை, மறக்கவும் இல்லை,” என எவ்வளவுதான் அவர் சமாதானப்படுத்த முயன்றாலும், நாமெல்லாம்  வஞ்சிக்கப்பட்டுள்ளதைப் போலான ஒரு உணர்வு நிலவுவதை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

இந்திய சமூகத்திற்கென ‘மித்ரா’, ‘அமானா இக்தியார்’ மற்றும் ‘தெக்குன்’ ஆகியத் திட்டங்கள் உள்ளன என்று அண்மையில் அவர் குறிப்பிட்டது நமக்கு சற்று வியப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி கொஞ்சம் சலசலப்பையும் கூடவே கொண்டு வந்தது.

ஏனெனில் இதெல்லாமே கடந்த சில ஆண்டுகளாக ஏற்கெனவே நடப்பில் உள்ளத் திட்டங்கள்தானே! இதனை ஏன் புதிய முன்னெடுப்புகளைப் போல் அவர் அறிவிக்கிறார் எனும் குழப்பமும் நம் எல்லாருக்குமே ஏற்பட்டது. ‘பழைய சாம்பாரை சுட வைத்துக் கொடுப்பதை’ப் போலல்லவா இருக்கிறது அவருடையக் கூற்று!

இப்போதுதான் தெரிகிறது இவ்வளவு நாள்களாக நமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் ஏன் அவர் மவுனம் சாதித்து வந்தார் என்று. எந்நேரத்திலும் மவுனத்தைக் களைந்து நம் நெஞ்சங்களை குளிர வைக்கும் திட்டங்களை அறிவிப்பார் என்று ஏங்கிக் காத்திருந்த நமக்கு பெருத்த ஏமாற்றம்தான்.

இத்தகைய சூழலில் ஒரு சில தினங்களுக்கு முன் நம்மைப் பற்றி அவர் பேசியது நமக்கு பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

“மலாய்க்காரர்களுக்காக நான் செய்வதைப் பார்த்து இந்திய சமூகம் கோபப்படக் கூடாது பொறாமையும் கொள்ளக் கூடாது,” என்று அவர் கருத்துரைத்தது யாரும் எதிர்பாராத ஒன்று. நம் சமூகத்தை நோக்கிப் பாயந்த கடுமையான வார்த்தைகள் இவை!

அவர் பேசியது நம் சமூகத்திற்கு தற்போது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை’ப் போல் உள்ளது. நமது ஞாபகத்திற்கு எட்டிய வரையில் கடந்த காலங்களில் கூட எந்த ஒரு பிரதமரும் நம் சமூகத்தை இப்படி பிளவுபடுத்தி பேசியது கிடையாது.

மலாய்க்காரர்களின் தனிப்பட்ட உரிமை மீது நம் சமூகம் எப்போதுமே கேள்வி எழுப்பியது இல்லை. எனவே அவருடைய தான்தோன்றித்தனமான இக்குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்ற ஒன்று என்றால் அதில் தவறில்லை.

நாட்டு மக்கள் என்ற வகையில் நமக்கான உரிமை அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டியவற்றைதான் நாம் கேட்கிறோமே தவிர மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவதை பறித்துக் கொடுங்கள் என ஒருபோதும் நாம் கேட்டதில்லை.

அப்படிப்பட்ட ஒரு தவறான கருத்தினால் நம் சமூகத்திற்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அவர் கொஞ்சமும் யோசித்தாரா தெரியவில்லை. இத்தகைய சூழலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட நாள்களாகும் என்பதில் ஐயமில்லை.

“எங்களையும் சமமாக நடத்துங்கள். நாங்களும் இந்நாட்டுப் பிரஜைகள்தான்,” என்பதுதானே நம் சமூகத்தின் கோரிக்கை, நமது ஆதங்கம்! இதை ஏன் அவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்  என்று தெரியவில்லை.

எனவே நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் இனிமேலும் ஒலிந்து கொண்டு ‘மவுன சாமியார்’களாக இருக்காமல் அன்வாரை சந்தித்து இதற்கு விளக்கம் கோருவது மட்டுமின்றி அவருடைய தவறான கருத்தை திருத்துவதற்கும் வழிக்கொணர வேண்டும்.

“பிரதமரை சந்நிக்க இயலவில்லை. எங்களுக்கு சந்திப்புறுதி கிடைக்கவில்லை,” என்றெல்லாம் சாக்குப் போக்குக் கூறி தப்பித்துக் கொள்ள முற்படக்கூடாது. நீங்கள் அவரை சந்திக்க இயலவில்லை என்றால் எந்த ஒரு குப்பனோ சுப்பனோ அவரை சந்தித்து இந்த விஷயத்தை விவாதிக்க முடியாது.

இல்லையேல் நம் சமூகத்தின் மீது மலாய்க்காரர்களுக்கு ஏற்படும் கோபத்தை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய சூழலில் அவர்களுடைய கோபம் நியாயமானதாகவும் இருக்கும். அவர்களுடைய நிலையில் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.

வெகுசன மக்கள் சாந்தமாக இருந்தாலும் இது போன்ற உணர்ச்சிமயமான விவகாரங்குக்காக காத்துக் கிடக்கும் சில சில்லரை அரசியல்வாதிகளுக்கு இவ்விவகாரம் தீனி போட்ட மாதிரியும் ஆகிவிடும். அதனை பூதாகரமாக்கி அவர்கள் குளிர் காய்ந்தாலும் வியப்பில்லை.

நல்ல வேளையாக அன்வார் தனிப்பட்ட ஒருவரையோ ஒரு இயக்கத்தையோ குறிப்பிட்டு பேசவில்லை. இல்லையென்றால் பூமிபுத்ரா உரிமையை கேள்வி கேட்கிறோம் என்று குற்றஞ்சாட்டி இந்நேரம் நாடு முழுவதிலும் காவல் துறையில் புகார் செய்திருப்பார்கள்.

எனவே அரசாங்க ஆதரவோ உதவியோ நமக்கு இருக்க வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, அப்படி இல்லையென்றால் என்னதான் செய்வது?

நமக்கு வேறு வழியே இல்லை என்று நினைத்துக் கொண்டு, இதனையும் ஒரு சவாலாக ஏற்று, ‘நம் கையே நமக்குத் துணை’ எனும் அடிப்படையில் சுயகாலில் நிற்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் போன்ற சிந்தனைகள் சிலருக்கு எழலாம்.

ஒரு நாட்டின் சொத்துடமை என்பது மக்களுடையது, அதன் நிருவாகம்தான் மக்களால் தேர்ந்தெடுக்கபப்டும் அரசாங்கம்.

அரசாங்கத்தின் தார்மீக பொறுப்பு மக்கள் நலன் கருதி ஆட்சையை நடத்துவது.

எனவே நமது உரிமைகளின் அடிப்படையில் நமது சிந்தனையையும் அதற்கான வழிறைகளையும் சமூகம் மீளாவ்வு செய்ய வேண்டும். அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள்!