தேசிய கால்பந்து வீரர் பைசல் ஹலிம் மீது நேற்று ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்திய 20 வயதுடைய நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான், சந்தேகநபருக்கு எதிராக இன்று தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் உட்பட இதுவரை மூன்று நபர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம்”.
“20 வயதுடைய ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர், அவர் இன்று விளக்கமறியலில் வைக்கப்படுவார்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக ஹுசைன் மேலும் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள டாமன்சாராவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, புலனாய்வாளர்கள் மேலும் பல சாட்சிகளை நேர்காணல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் எஃப்சி விங்கரான ஃபைசல், ஆசிட் வீச்சில் ஏற்பட்ட காயங்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனைக்கு விரைந்தார், அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
இரண்டாவது தாக்குதல்
இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை அவர்கள் நிறுவினார்களா என்ற கேள்விக்குப் போலீசார் இதுவரை பதிலளிக்கவில்லை.
ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை திரங்கானுவில் அக்யார் ரஷித் தாக்கப்பட்ட பின்னர், மூன்று நாட்களுக்குள் ஒரு தேசிய கால்பந்து வீரர் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இந்தச் சம்பவம் ஒரு கொள்ளையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், ஹரியான் மெட்ரோ, இரண்டு ஆசாமிகள் இரும்பு தடி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி அக்யாரின் கால்களைக் குறிவைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இரண்டு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, விசாரணை நடந்து வருவதாகவும், முடிவடைய இன்னும் தாமதமாக இருப்பதாகவும் ஹுசைன் கூறினார்.