உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் மந்திரி பெசார் அமிருதின் ஷைரின் ஆகியோர் அறிவித்தனர்.
அவ்வறிவிப்பை PSM, தோட்டத் தொழிலாளர் ஆதரவுக் குழு (JSML) மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர் பெருமளவில் வரவேற்கின்றனர்.
அருட்செல்வன் சுப்ரமணியம்
இந்த அறிவிப்பின் அடிப்படையில், மேரி தோட்டம் ,சுங்கை திங்கி தோட்டம், மின்யாக் தோட்டம் , நைஜல் கார்டனர் தோட்டம் மற்றும் புக்கிட் தாகர் தோட்டம் ஆகிய ஐந்து தோட்டத்தைச் சேர்ந்த 245 தொழிலாளர்கள் மானிய விலையில் மலிவு நிலம் கொண்ட வீடுகளைப் பெறுவார்கள்.
அமிருடின் ஷாரி
இதற்கான பெரும்பாலான செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் ஏற்கும். தொழிலாளர்களின் போராட்டத்தின் விளைவாக முன்பு நிலம், குறைந்த விலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் டவுன் வீடுகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் அதைப் புறக்கணித்தற்கான காரணம் தங்களுக்கான நிலச்சொத்துடைமை கோலாசிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூர் நிலத்திலேயே கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
இந்த நிலையின் பகுப்பாய்வு கீழே வழங்கப்பட்டுள்ளது.
ஏன் கிடைக்கப்பட்ட வெற்றி குறிப்பிடத்தக்கது?
இலவச வீட்டுமனையைப் பெற்ற முதல் தோட்டத் தொழிலாளர்கள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் மற்றும் மானிய வீடுகள் கிடைப்பது சரித்திரம் அல்ல, ஏனெனில் PSM, JSML மற்றும் பல்வேறு தோட்டங்களைச் சேர்ந்த துணிச்சலான தோட்டத் தொழிலாளர்களும் இதற்கு முன் வீடுகளைப் பெற்றுள்ளனர்; சில இலவசமாக கிடைத்தது மற்றும் சில அதிக மானியங்களால் கிடைக்கப்பெற்றது.
சிலாங்கூர் இலவச வீட்டுமனையைப் பெற்ற முதல் தோட்டத் தொழிலாளர்கள் 1991-இல் சுங்கை ராசா தோட்டத்தை சார்ந்தவர்கள். இத்தகைய சிறு வெற்றி சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொள்கை ஒன்றினை அமல்படுத்த தூண்டியது. அதாவது, தோட்டம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அங்கமான தோட்ட தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்குரிய வீட்டுடமை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.
1990 களின் முற்பகுதியில், பல தோட்ட நிலங்கள் தொழிற்சாலை நிலங்களாகவும் சொத்து சந்தையாகவும் மாற்றப்பட்டன. பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்கள் நிலங்களை பெரும் லாபத்துடன் விற்றன. பெரும்பாலான நேரங்களில், தோட்டக் நிறுவனங்கள் தொழிலாளர்களை அவர்களது கூட்டு ஒப்பந்தம் (CA) அல்லது வேலை வாய்ப்புச் சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு செலுத்தி வெளியேற்றும். இதன் விளைவாக, தொழிலாளர்கள் ஒன்றிணைக்கப்பட்டு தங்களுக்கான வீட்டுவசதி கோரி தோட்டங்களில் எதிர்ப்பை காட்டினார்கள்.
பிரேமர் தோட்டம், புக்கிட் ஜெலுதோங் தோட்டம் மிட்லாண்ட்ஸ் தோட்டம், புரூக்லாண்ட்ஸ் தோட்டம் மற்றும் பலதோட்டங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றது.
ஙா கோர் மிங்
அந்த எதிர்ப்புகளைக் குறைக்க சில கொள்கைகள் இயற்றப்பட்டாலும், சட்டங்களாக மாற்றப்பாடவில்லை. 1995 இல், பொதுத் தேர்தலுக்குக் கொஞ்ச காலத்திற்கு முன், மனித வள அமைச்சர் லிம் ஆ லெக் சிலாங்கூரில் இதேபோன்றதொரு தேசியக் கொள்கையை அறிமுகப்படுத்தினார், அதாவது, தோட்ட மூன்னேற்றதிற்காக பாடுபட்ட எந்தவொரு தோட்டத் தொழிலாளியும் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, வீடு வழங்கப்பட வேண்டும் என்றார்.
சொல்லப்பட்ட இவை அனைத்தும் சட்டப்பூர்வமான பிணைப்பு இல்லாத கொள்கைகளாக இருந்தன, ஆதலால் சட்டப்பூர்வமாக வீட்டுரிமையைப் பாதுகாக்க இயலவில்லை.
துன் அப்துல் ரசாக்கால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கொள்கையும் கூட; 1973-இல் NEP-இன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுரிமைத் திட்டமானது, 10 மில்லியன் சுழல் நிதியை அது கொண்டிருந்தாலும், ஆயிரக்கணக்கான தோட்டங்களில் ஒரு டசனுக்கும் குறைவான தோட்டங்களே இந்தத் திட்டங்களால் பயனடைந்தன.
மத்திய அரசின் தலைநகரான புத்ராஜெயாவுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை, வெளியேற்றப்பட்ட 4 தோட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு மாடி வீடுகளைக் கட்டி தர அரசாங்கம் முடிவு செய்தபோது மற்றொரு வரலாற்று வெற்றி நிகழ்ந்தது. அவர்களுக்கு 4,600 ஹெக்டேர் நிலம் கொடுக்கப்பட்டது. இது மகாதீர், சாமிவேலு மற்றும் சிலாங்கூர் MP முகம்மது தைப் ஆகியோரின் ஆட்சிக் காலமாகும்.
தோட்டத்தைவிட்டு வெளியேற்றியவர்களை டெங்கிலில் உள்ள தாமான் பெர்மாத்தா குடியிருப்பு அல்லது 4 பிளாக்கு என்று அறியப்பட்ட மாடி வீடுகளிலில் மக்களை குடியேற்றினர்.
அவசர அவசரமாக, தரமில்லாமல் கட்டப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இன்று வரை தகுதி சான்றிதழ் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு குடிபெயர்ந்ததற்கான காரணம் 1999 தேர்தலுக்கு முன்பு RM 20,000 தள்ளுபடி விலையில் வீடு வழங்கப்பட்டதால்தான்.
நஜிப் சுமார் 404 வீடுகளைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்
அதனைத் தொடர்ந்து பல போராட்டங்கள் PSM மற்றும் CDC-யால் இந்தத் தொழிலாளர்களுக்காக வழிநடத்தப்பட்டது. 2018 தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு ஆகஸ்ட் 2017 இல் நஜிப் சுமார் 404 வீடுகளைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மற்றும் இத்திட்டத்திற்காக சுமார் 60 மில்லியன் செலவும் செய்தார். நஜிப் தனது உரையில், தேசிய வளர்ச்சிக்காகத் தியாகம் செய்த மக்களின் புலம்பலை பாரிசான் நேஷனல் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதை இந்த வீட்டுத் திட்டம் நிரூபித்துள்ளது என்றார்.
“நான்கு தோட்டங்கள் மற்றும் 400 குடும்பங்களின் தியாகம் இல்லாமல், இன்று நமக்கு இருக்கும் புத்ராஜெயா இல்லை” என்பதைப் பறைசாற்றினார்”.
RM60 மில்லியன் திட்டத்தின் கீழ் உள்ள வீடுகள் RM150, 000 அசல் விலையுடன் ஒப்பிடும்போது ஒரு யூனிட்டு குறைந்த விலையான RM20, 000 விற்கப்படும் என்றும் நஜிப் அறிவித்தார்.
தற்போது லோட் 25 பெஸ்தாரி ஜெயாவில் உள்ள 5 தோட்டங்களின் வீட்டுரிமையைப் பெற்ற இந்த வெற்றி ஏன் குறிப்பிடத்தக்கது? இந்த வெற்றி குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் மடானி அரசாங்கம் முதன்முறையாகத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தோட்டத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இது உண்மையில் ஒரு நல்ல நடவடிக்கையாகும். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் இன்று அவர்களது சம்பளத்தின் அடிப்படையில் சுமார் 250 ஆயிரம் விலையுள்ள வீடுகளை வாங்க முடியாது. தோட்டத்தில் மூன்று நான்கு தலைமுறைகளாக உழைத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இது ஒரு வெகுமதியாகக் கருதப்பட வேண்டும். அவர்களின் உழைப்பு தேசத்தின் பொருளாதார நல்வாழ்வுக்குப் பங்களித்தது மட்டுமின்றி சைம் டார்பி போன்ற நிறுவனங்களின் அபரிமிதமான லாபத்திற்கும் வழிவகுத்தது.
மடானி அரசாங்கம் இத்தகைய திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் இறங்குவதன் மூலம், தொழிலாளர்கள் தற்போது தங்கியுள்ள தோட்ட வீடுகள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக இருப்பதால் தோட்டத் தொழிலாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும் சூழலை அது மட்டுப்படுத்தும். அதே வேளையில் வீடு வைத்திருக்கும் ஃபெல்டா குடியேற்றவாசிகள், தங்கள் வழக்கமான நிலத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஓராங் அஸ்லி அல்லது சீனப் புதிய கிராமங்களில் தங்கியிருப்பவர்களிடமிருந்து இவர்களின் நிலைமை வேறுபட்டது. தோட்டத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அல்லது வேலையை இழக்கும் போது, அவர்கள் தங்குமிடத்தையும் சேர்த்தே இழக்கிறார்கள்.
பல ஆண்டுகள் போராடி கிடைத்த வெற்றி
அரசாங்கம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறியபோது, இரு தரப்பிலிருந்தும் சில உள்ளூர் தலைவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அவ்வெற்றியை தங்கள் முயற்சி என்று சித்தரிக்க அவர்கள் முயல்கின்றனர்.
மாறாக இது உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் துணிச்சலான போராட்டமும் அதோடு தேசிய வீட்டுவசதி துறை (JPN) உயர் அதிகாரியான டத்தோ ஜெயசீலனின் முயற்சியால் கிடைத்ததாகும்.
இதை விரிவாக விளக்கினால் ஒரு புத்தகமாகிவிடும். அதனால் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. வின்செண்ட் தானின் பெர்ஜாயா நிறுவனம் 11500 ஏக்கர் நிலத்தை SOCFIN – ஒரு பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. பெர்ஜயா நிறுவனம் முதல் நாளிலிருந்தே, தோட்டத் தொழிலில் ஆர்வம் காட்டவில்லை, மேலும் அவர்கள் சில்லறை வார்த்தகம்,சூதாட்டம், உணவு, கட்டிடம் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டினர். பெர்ஜெயா நிறுவனம் 1999 ஆம் ஆண்டிலேயே, அவர்களின் தோட்டம் விரிவுபடுத்தப்பட்டால் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதை போலவே வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்த பல அரசியல்வாதிகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். பெரும்பாலும் இத்தகைய வாக்குறுதிகள் பொதுத் தேர்தல் சமயத்தில்தான் வெளிவரும். 2008-க்கு முன் BN மற்றும் 2008-க்கு பின் PH. இதில், MIC பழனிவேல், சிவலிங்கம் போன்ற தலைவர்களும், PH Exco YB சேவியர், கணபதிராவ் PKR பிரதிநிதிகளும் கூட உள்ளனர். Khir Toyo மற்றும் Noh Omar போன்ற UMNO தலைவர்களும் இதில் அடக்கம். வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் அமைச்சரான Zuraidah-வும் இதற்கு விதிவிலக்கல்ல.
2015 இல் பெர்ஜயா நிலத்தை தாகார் நிறுவனம் விற்றபோது பிரச்சனை தீவிரமானது. 57 தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு ஏப்ரல் 15, (2016) காலி செய்ய வெளியேற்ற நோட்டீஸ்களைப் பெற்றனர். வெறும் ஒரு மாத கால அவகாசமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதை தடுத்து நிறுத்த PSM காவல் நிலையத்தில் பலமுரை புகார் அளித்தது. அத்துடன் வெளியேற்ற அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அரசு மற்றும் பெர்ஜெயாவுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
பெர்ஜயா வீடுகளைக் கட்டத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர்கள் தண்ணீர் குழாய்களை அமைக்க வேண்டும் என்பதால் அதற்கு 6 மில்லியன் செலவாகும் என்றும் YB கணபதிராவ் எங்களிடம் கூறினார். ஏப்ரல் 13 தேதி வழங்கப்பட்ட கால அவகாசத்தின் இரண்டு நாட்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது மந்திரி பெசாரான YB அஸ்மின் அலிக்கு மெமோராண்டம் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, YB கணபதிராவ் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது, அப்போது பெர்ஜெயா மற்றும் புதிய உரிமையாளரான தாகர் பிராப்பர்டீஸிடமிருந்து வீட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வெளியேற்றம் நடைபெறாது என்று நாங்கள் உறுதி பெற்றோம்.
இது தற்காலிகமாக தொழிலாளர்களை தோட்டத்தை விட்டு வெளியேற்றும் அச்சுறுத்தலைத் தள்ளி வைத்தது. நவம்பர் 2016-இல், பெர்ஜயா நிறுவனம் YB கணபதிராவ் மூலம் ஒரு இறுதி தீர்வை வழங்கினர். மலிவு விலையில் ரூமா சிலாங்கூர் கூ-வை உருவாக்கி மக்களுக்கு வழங்க உள்ளதாக அவர்கள் கூறினர். தற்போது பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட 245 தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், 69 தொழிலாளர்களுக்கு மட்டுமே அச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தரை வீடுகள் வேண்டுவதை நாங்கள் வலியுறுத்தினோம். குறைந்த விலை அடுக்குமாடி வீட்டுச் சலுகை தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 13 ஜூலை 2017 அன்று, பாதிக்கப்பட்ட தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் 5 பேருந்துகளில் கோலாலம்பூரில் உள்ள Berjaya Times square-க்கு சென்றனர். நாங்கள் பெர்ஜெயாவிடம் 2 கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில், குறைந்த செலவில் 245 மாடி வீடுகள் கட்ட வேண்டும், வீடுகள் கட்டிமுடிக்கும் வரை தோட்டத்தைவிட்டு வெளியேற முடியாது என்பதுதான்.
வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை இந்த நிலப் பகுதிகளில் பெர்ஜெயாவின் அனைத்து மேம்பாட்டுத் திட்டத்தையும் முடக்குமாறு மாநில அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். JPN-இன் ஆலோசனையைப் பெற்ற பிறகு, செப்டம்பர் 21 அன்று KPKT அமைச்சருக்கும் அதிபர் வின்சென்ட் டானுக்கும் (பெர்ஜெயா உரிமையாளர்) நிலத்தை 12.75 ஏக்கரிலிருந்து 20 ஏக்கராக உயர்த்தினால்தான் 245 தொழிலாளர்களுக்கும் வீடுகள் கட்டக்கூடும் எனக் கடிதத்தில் எடுத்துரைத்தோம்.
மே 2018-இல் GE 14 நடைபெறவிருந்த நிலையில், YB நோர் ஓமர் தஞ்சோங் கராங்கில் PPR பெஸ்தாரி ஜெயா என்ற வீட்டுத் திட்டத்தைத் தொடங்கினார். PH ஆட்சியின் கீழ் உள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கம் அத்தகைய திட்டத்தைப் பற்றி அறியாததால் இது உண்மையில் ஒரு தேர்தல் பகட்டு வித்தையாகவே தெரிந்தது. தேர்தல் முடிந்தவுடன், நோர் ஓமர் முன்மொழிந்த அடுக்குமாடி திட்டத்தை ரத்து செய்யுமாறு புதிய அமைச்சர் YB சுரைதாவுக்கு கடிதம் எழுதினோம்.
இறுதியாக, பிப்ரவரி 26 அன்று, 245 மாடி வீடுகள் கட்டுவதற்கு 20 ஏக்கரை ஒதுக்கலாம் என்று பெர்ஜயாவிடமிருந்து 11 ஜனவரி 2019 தேதியிட்ட கடிதம் எங்கள் குழுவிற்கு வந்தது.
இந்த தடை தீர்ந்த பிறகு, 96.5 மில்லியன் பட்ஜெட் இருப்பதாக YB சுரைதா மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது, ஆனால் டெண்டர் செயல்முறை போன்ற புதிய குளறுபடிகளும் கூடவே வந்தன. பின்னர் தேசமும் உலகமும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் இந்த தோட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.
அதன்பின் வரவு செலவுத் திட்டத்தைப் பெறுவதற்கு பல கடிதங்கள் எழுதினோம். ஆனால், பதில் இல்லை. இந்தத் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் EPU, KPKT மற்றும் நிதி அமைச்சருக்கு நாங்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தோம். ஆனால் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
புதிய அமைச்சர் ஙா கோர் மிங் வருகைக்குப் பிறகு அவர் ஆரம்பத்தில் எங்களின் எந்தக் கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கவோ அல்லது பதில் அளிக்கவோ விரும்பவில்லை. 20 ஏக்கர் பெர்ஜயா நிலம் குறித்து YB கணபதிராவிடமிருந்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நம்பிக்கையில்லாத பதில்தான் அளிக்கப்பட்டது. கடந்த மாநிலத் தேர்தலின் போது, மறைந்த YB லீ கீ ஹியோங், 2023 ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன்னர் அமைச்சருடன் நியமனம் பெறுவதாக உறுதியளித்தார், ஆனால் அதுவும் நடக்கவில்லை.
PKR மற்றும் PH-இன் உள்ளூர் தலைவர்கள் பலர் எங்களைச் சந்திக்க முன் வந்தாலும் இவை அனைத்தும் அமைச்சரைச் சந்திப்பதற்கான நியமனத்தை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் இருப்பதால் பட்ஜெட் ஒதுக்கப்பட வேண்டும் எனில் அமைச்சருடன் ஒரு சந்திப்பு தேவைப்பட்டது.
விஷயங்களை மோசமாக்கும் வகையில், புதிய சிலாங்கூர் எக்ஸ்கோ பாப்பராய்டு தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவை உருவாக்க முயன்றார், மேலும் புதிய கணக்கெடுப்பை நடத்த விரும்பினார்; அவர் பல ஆண்டுகளாக இந்த விஷயத்தில் பணியாற்றிய அசல் குழுவை ஓரங்கட்ட விரும்பினார்.
இதைக் கேட்டு தொழிலாளர்கள் 22 மார்ச் 2024 அன்று, தலைமை அமைச்சருக்கு ஒரு எதிர்ப்பு கடிதத்தை அனுப்புகிறார்கள். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எக்ஸ்கோ தனது நண்பர் ஒருவரை புது குழுவின் தலைவராக நியமித்திருப்பதாகக் கூறினார். இந்த நபர் முன்பே வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் புதிய தோற்ற உரிமையாளரிடம் ஒப்பந்தத்தின் கீழ் வேலை செய்வதாலும் எங்களது குழு உறுப்பினர்கள் இந்த நபரின் தேர்வை நினைத்து ஐயம் கொண்டனர்.
இடைத்தேர்தலால் காப்பாற்றப்பட்டோம்
இடைத்தேர்தலுக்கு முன், நிலவரம் தேக்கமடைந்ததை நாங்கள் உணர்ந்தோம். பல உள்ளூர் அரசியல்வாதிகள் எங்களிடமிருந்து ஆவணங்களை கேட்டுக் கொண்டே இருந்தாலும் அமைச்சருடனோ தலைமை அமைச்சருடனோ ஒரு சந்திப்பை உறுதிப்படுத்த இயலவில்லை. புதிய எக்ஸ்கோ நியமித்த குழு முழு செயல்முறையையும் மறுபரிசலித்து இதற்காக இத்தனை காலம் போராடிய உள்ளூர் தோட்டத் தொழிலாளிகளின் குழுவை தவிர்க்க நினைத்தது.
இத்தகைய தேக்கமான சூழ்நிலைகளை பார்க்கும்போது போராட்டத்தை மீண்டும் உற்சாகப்படுத்த இரண்டு யுக்திகளுடன் முன் வந்தோம். முதலாவது, அமைச்சரின் வருகையை பெறுவதற்கு KPKT அல்லது பாராளுமன்றத்திற்கு மக்களை திரட்டுவது என்பதை பற்றி யோசித்தோம். அடுத்து அதே நேரத்தில் இடைத்தேர்தல் சாத்தியம் என்ற செய்தி திடீரென மொத்த சமன்பாட்டையும் மாற்றியது.
அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த ஆண்டுகளைப் போல் அரசியல்வாதிகள் எங்களைத் திசை திருப்ப அனுமதிக்கப் போவதில்லை என்பதை நாங்கள் முடிவு செய்தோம். எனவே அரசியல் கட்சிகள் அமைக்கும் கூடாரத்தில் தொழிலாளர்கள் உட்காராமல் தாங்களாகவே கூடாரம் ஒன்றைப் போடுவதாகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எங்களின் ஆதரவைக் கூறி வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் அவர்களது வேட்பாளர்களும் சட்டப்பூர்வமான பிரகடனத்தில் கையொப்பமிடச் செய்து இது தொடர்பான எங்களது அறிக்கைகளை படிக்கும் படி கேட்டுக் கொள்ளப்போவதாகவும் முடிவெடுக்கப்பட்டது. ஆளுங்கட்சியிலிருந்து வருபவர்களைப் பொருத்தவரை தலைமை அமைச்சரோ KPKT அமைச்சரோ கண்டிப்பாக எங்களைப் பார்க்க வர வேண்டும் என்ற செய்தியையும் அனுப்புவோம் எனப் பேசினோம்.
எங்களது முடிவுகளை நிர்ணய படுத்துவதற்காக ஏப்ரல் 24ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினோம். ஐந்து தோட்டங்களில் இரண்டு மட்டுமே – நைஜல் கார்டனர் மற்றும் புக்கிட் தாகர் ஆகியவை KKB-யின் தொகுதியின் ஒரு பகுதியாகும். எங்களது செய்தியாளர் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஐந்து தோட்டங்களிலிருந்த சுமார் 60 தொழிலாளர்கள் தங்கள் வழக்கை முன்வைக்க வந்தனர். மாறாக மாநில எக்ஸ்கோ நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுங்கை திங்கி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பங்கெடுத்தார். எங்களது கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை. எங்களிடம் நிலம் இருக்கிறது வீடுகள் கட்டப்பட பட்ஜெட் தேவை என்பதுதான்.
பலரும் சட்ட பிரகடனத்தைக் கேலி செய்தாலும் குறிப்பிட்ட கோரிக்கைகளைக் கொண்ட சட்டப் பிரகடனத்தை படிக்குமாறு அரசியல்வாதியைச் சூழ்நிலை கட்டாயப்படுத்தியது. பல செய்தி தளங்களும் இதை முன்னிலைப்படுத்தி சட்ட பிரகடனத்தில் புதியதாகக் கையொப்பமும் இட வேண்டும் என்பதை ஆலோசித்தார்கள். ஒரு காலத்தில் சாதுரியமானவர்களாக வர்ணிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது பிரச்சார காலம் தொடங்கியதும் தெளிவாகத் தெரிய வந்தது. இரு பிரதான கட்சிகளும் தங்கள் கொடிகளை அங்கு நடுவதில்கூட சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் உள்ளூர் இளைஞர்கள் அதை அகற்றுவார்கள் அல்லது அவர்களின் வீட்டுக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அதை அகற்றக் கோருவார்கள். இரு தரப்பு அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியான எதிர்ப்புகளை எதிர் நோக்கினர். நைஜீல் கார்டன் தோட்டத்திற்குள் நுழைந்த சில MP, ADUNS மற்றும் அமைச்சர்கள் வரவேற்கப்படாதது செய்தியாகப் பரவியது. இந்த இடைத்தேர்தல் எளிதாக இருக்கப் போவதில்லை என்பதையும் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் மக்கள் விரும்புவதால் வெறும் ஆகாய கோட்டை கட்டுவதில் வாக்குகள் பெறப்போவதில்லை என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்தனர்.
விரைவில் இந்தச் செய்தியை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் சென்றது. முதல்வர் அமைச்சர் பிரதமர் ஆகியோரிடம் பலரும் இந்த பிரச்சனையைப் பற்றிய கேள்விகளை எழுப்பினார்கள்.YB குணராஜ், பிரதமர் அன்வார் தானே YB ஙாவுக்கு பிரச்சனையைத் தீர்க்க உத்தரவு விட்டதாக எங்களிடம் கூறினார். முந்தைய தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் களநிலவரங்களை புரிந்து கொண்டதால் YB ஙா பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
இறுதியாக ஒரு அறிவிப்பு மற்றும் ஒரு சாதனை
இறுதியாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. போராட்டம் வெற்றி அடைந்தது. எந்த வேட்பாளரும் சட்ட பிரகடனத்தில் கையொப்பமிடவில்லை. ஆனால் அமைச்சரின் அறிவிப்பைப் பெறுவதும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறுவதும் இப்போது எங்களின் உத்தரவாத கடிதமாகும். இது தேர்தல் வித்தை எனப் பல தரப்புகள் எங்களிடம் கூறினர். ஆனால் வீட்டிற்கான நிலம், அதற்கான அளவு நிதி போன்ற சில அம்சங்களை நாங்கள் மீண்டும் மீண்டும் சரிபார்த்தோம். அவை அனைத்துமே உண்மையானதாக இருந்தது. JPN-னைச் சேர்ந்த டத்தோ என்.ஜெயசீலன் கருத்துப்படி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பல தரப்பினருக்கு நன்றி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எங்களின் அவல நிலையைக் கேள்வி எழுப்பி வெளிச்சம் போட்டுக் காட்டிய ஊடகங்களுக்கும், ஆளுங்கட்சியில் உள்ள சில அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்க, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பயன்படுத்தித் தேர்தல் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சிகளுக்கும் எங்களது நன்றி. எங்களிடம் பல கேள்விகளை எழுப்பும்போதும் பொறுமையாக அறிவுரை கூறி உதவிய டத்தோ என். ஜெயசீலன், தேசிய வீடமைப்பு திணைக்களத்தின் தலைமை அதிகாரி (JPN) அவருக்குச் சிறப்பு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரச்சாரத்தின் முதல் வார இறுதியில் இச்செய்தி கசிய ஆரம்பித்தபோது பல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இதை தங்களது வெற்றியாகத் திசை திருப்பப் பார்த்தனர். 11 தேதிக்குப் பிறகு, KKB சூழ்நிலை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என நான் மக்களிடம் கூறினேன். மேலும் தொழிலாளர்களுடைய போராட்டமே இத்தகைய பெரும் வெற்றியைச் சாத்தியப்படுத்தியது. இருப்பினும் தொழிலாளர்கள் வீடுகளை எப்படி வாங்குவது மற்றும் பிற விஷயங்களை எப்படி நிர்வகிப்பது என்பதைக் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.
நாங்கள் எப்போதும் சொல்வது போல, போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்ட தொழிலாளர்கள்தான் இறுதியான பாராட்டுக்குரியவர்கள். வீடு வசதிக்கான இந்தப் போராட்டம் சுமார் கால் நூற்றாண்டைக் கண்டது. நிலத்தில் உழைத்து இந்த தேசத்திற்காகச் செல்வத்தையும் செழிப்பையும் மூன்று நான்கு தலைமுறைகளாகத் தொடர்ந்து பங்களித்துள்ள தொழிலாளர்களுக்கான சன்மானம் திரும்பிச் செலுத்தப்பட வேண்டும்.
இந்த குறிப்பிட்டதக்க வெற்றி மற்ற தோட்ட சமூகத்திற்கும் போராட்டத்தைக் கையில் எடுக்க ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்.
எஸ். அருச்செல்வன்
தமிழில் மோகனா