தமிழ் எழுத்தாளர் சங்கம் சீர்திருத்தம் பெற வேண்டும்

இராகவன் கருப்பையா – மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மறைந்த ஊடகவியலாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி குமணன் போன்றோர் தலைவர்களாக இருந்த காலக்கட்டம் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையில்லை.

எம்.துரைராஜ் கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு வரையிலும் அதனைத் தொடர்ந்து ஆதி குமணன் 1987ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரையிலும் அச்சங்கத்திற்கு தலைவர்களாக இருந்தனர்.

அதீத ஆற்றல் மிக்க அவர்கள் அச்சங்கத்திற்கு தலைமையேற்றிருந்த  அந்தக் காலக்கட்டத்தில் இருந்த மதிப்பும் மறியாதையும் இப்போது அந்த அமைப்புக்கு இருக்கிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக் குறிதான்.

ஏனெனில் அச்சங்கம் அதன் அசலான இலக்கிலிருந்து தடம் மாறி தற்போது சோம்பிப் போய்விட்டதைப் போலான ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட சிலர் ‘உடும்புப் பிடி’யாக அச்சங்கத்தை ‘இருக்க அணைத்துக் கொண்டது’ அதற்கு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம்.

ஏற்கெனவே தலைமை பொறுப்பில் இருந்த ஒருவர் தனது தவணை காலம் நிறைவடைந்தவுடன் அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கு வழி விட்டு கவுரவமாக ஒதுங்கிக் கொள்வதுதான் உத்தமம்.

வேண்டுமென்றால், அதாவது உறுப்பினர்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டால் அதற்கு அடுத்த ஒரு தவணைக்கு அவர் ஆலோசகராக இருக்கலாம். அதன் பிறகு அவர் சாதாரண உறுப்பினர் அந்தஸ்துக்கு இறங்க வேண்டும். இதுதான் பெரும்பாலான இயக்கங்களில் நடைமுறையில் உள்ளது.

விடாக்கண்டன் கொடாக்கண்டனாக வரலாற்றில் இல்லாத புதியதொரு பதவியை உருவாக்கிக் கொண்டு அங்கேயே காலம் முழுவதும் அமர்ந்து கொள்ள எண்ணக் கூடாது.

சுமார் 2 வாரங்களுக்கு முன் நடைபெற்ற அச்சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தின் போது புதிய தலைவர் ஒருவர் பதவியேற்ற வேளையில் ஏற்கெனவே தலைவர்களாக இருந்தவர்கள் நாசுக்காக மீண்டும் செயலவையில் நுழைந்துக் கொண்டது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இதன் நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. அனேகமாக மீண்டும் ஒரு முறை உச்சத்தை அடைவதற்கான ஏவுதளமாக இதனை பயன்படுத்திக் கொள்வார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில் செயற்குழு என்பது பொதுவாக புதியவர்களுக்கு ஒரு பயிற்சிக்களமாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய ஏற்கெனவே தலைமை பீடத்தில் இருந்து சுகங்களை அனுபவித்தவர்களுக்கு அல்ல.

அந்த ‘சீனியர்’கள் புதியவர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லையென்றால் சங்கத்தின் நிர்வாகம் ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பதை’ப் போல்தான் இருக்கும்.

சங்கத்திற்கான புதிய இலக்கு, புதிய சிந்தனை, புதிய வியூகம், போன்ற அம்சங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்கான வழியே இருக்காது.

“குறிப்பிட்ட ஒரு சிலரின் இத்தகைய சுயநல போக்கினால் நிறைய எழுத்தாளர்கள் சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர வாய்ப்பில்லாமல் வெளியே இருக்கிறார்கள்,” என வார இதழொன்றின் ஆசிரியர் ஒருவர் அண்மையில் கருத்துரைத்தார்.

“அச்சங்கத்தில் தற்போது எழுத்தாளர்களை விட சுற்றுப் பயணிகள்தான் அதிகம் உள்ளனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார். ஏனெனில் இப்போதெல்லாம் சங்கம் அதன் அசல் இலக்கை தவறவிட்டு சுற்றுப் பயணங்களில் அதிக கவனம் செலுத்துகிறது.

“இந்த நிலை மாற வேண்டும். புதியவர்களும் உண்மையான எழுத்தாளர்களும் அரவணைக்கப்பட வேண்டும். அதுதான் எழுத்தாளர் சங்கத்தின் மீதான மறியாதையைக் கூட்டும்,” என அந்த மூத்த பத்திரிகையாளர் விவரித்தார்.

“வெறுமனே தேர்தல் சமயங்களில் ஓட்டுப் போடுவதற்காக அடிமைகளைச் சேர்த்து வைப்பது அழகல்ல. இது போன்ற கறைகளிலிருந்து சங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமைத்துவத்திற்கு உள்ளது,” என அவர் ஆலோசனை கூறினார்.