நெடுஞ்சாலை கழிவறையில் 25 வயது காவலர் சடலமாக மீட்பு

நேற்று மாலை நெடுஞ்சாலையில் உள்ள ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு கழிவறையில் காவல் அதிகாரி ஒருவர் இறந்து கிடந்தார்.

நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் கூறுகையில், மாலை 5.45 மணியளவில் ஒரு நபர் சம்பவம்குறித்து புகார் அளித்தார்.

“25 வயதுடைய இளைஞன் திருமணமானவர் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கழிவறையில் உள்ள ஒரு பிரிவின் மேல் உலோகக் கம்பத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கோலாலம்பூர் படைப் பிரிவில் பணியாற்றும் காவலர்”.

“நெகிரி செம்பிலான் குற்றப் புலனாய்வுத் துறையின் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைக்கு உதவியது மற்றும் பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காகத் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் மாலிக் கூறினார்.

பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்த அவர், விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க வழக்கை ஊகிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.