அரசாங்கம் அதன் அளவை விரிவுபடுத்துவதற்கும் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும் பொருளாதார வளர்ச்சியைப் புத்துயிர் பெறுவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
நாடு ஆசியப் பொருளாதாரத் தலைவராக மாற வேண்டும் என்ற மடானி பொருளாதாரத்தின் குறிக்கோளுக்கு இணங்க, அதிக வருமானம் கொண்ட நாடாக மாறுவதற்கான மாற்றத்தை விரைவுபடுத்த பொருளாதார கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
“அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரம் ஆண்டுக்கு 5.0 சதவிகிதம் முதல் 6.0 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும்,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
மதானி பொருளாதாரதில் அடைய வேண்டிய ஏழு இலக்குகளில் ஒன்றான, உலகின் 30 பெரிய பொருளாதாரங்களில் மலேசியாவை இடம்பெறச் செய்வதற்கான அரசாங்கத்தின் விரிவான திட்டம்குறித்த முகமட் சியாஹிர் சே சுலைமானின் (PN-Bachok) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க 12வது மலேசியத் திட்டம், தேசிய ஆற்றல் மாற்றம் சாலை வரைபடம், புதிய தொழில்துறை மாஸ்டர் பிளான் 2030 மற்றும் பட்ஜெட் 2024 ஆகியவற்றின் இடைக்கால மதிப்பாய்வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முன்முயற்சிகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் ஆதரிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.
முதலீட்டை ஈர்க்கும்
கூடுதலாக, சிக்கலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் திறமையான மற்றும் அதிக வருமானம் கொண்ட வேலைகளை உருவாக்கவும் உயர் வளர்ச்சி மற்றும் உயர் மதிப்புத் தொழில்களில் அதிக தரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.
“திறன் மற்றும் உற்பத்தித்திறனை விரிவுபடுத்துவதற்கு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பெறுவதில் முதலீடுகளை அதிகரிக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் மற்றும் பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய தரவுப் பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும்”.
“புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு உட்பட வணிக செயல்பாடுகள் மற்றும் வளாகங்களில் பசுமை முதலீடுகளைத் தீவிரப்படுத்தவும் அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.
ஆராய்ச்சி, மேம்பாடு, வணிகமயமாக்கல் மற்றும் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உயர் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான வழிகளையும் அரசாங்கம் எளிதாக்கும் என்றார்.