மெட்ரிக்குலேஷன் கல்வி: அரசாங்க முடிவு சரிதானா?

இராகவன் கருப்பையா- அடுத்த ஆண்டிலிருந்து மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் சேர்வதற்கு குறைந்த பட்சம் ’10ஏ’ பெறும் எல்லா இன மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பானது விடையில்லாத அதிகமான கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன் மாதங்களில் நம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளில் இடம் கிடைக்காமல் படும் அவஸ்தை நம் மனங்களை கரைக்கத் தவறியதில்லை.

அந்த அவலத்திற்கு பிரதமர் வாயிலாக இவ்வாண்டாவது விமோசனம் பிறக்காதா என எதிர்பார்த்திருந்த சமயத்தில்தான் அடுத்த ஆண்டிலிருந்து சிறப்புச் தேர்ச்சி பெறும் எல்லாருக்கும் இடமுண்டு என அன்வார் அறிவித்தார்.

அவர் செய்த அறிவிப்பு அடுத்த ஆண்டில்தான் அமுலாக்கம் காணும் என்பதால் இவ்வாண்டின் நிலை என்னவென்று தெரியவில்லை. அந்த யோசனையை ஏன் இவ்வாண்டிலேயே அமுலாக்கம் செய்யவில்லை எனும் கேள்வியும் எழுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டுக்கு முன் 1500 இடங்கள் இந்திய மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய பிரதமர் நஜிப், அவ்வெண்ணிக்கையை 2,200ஆக உயர்த்தினார்.

எனினும் அதன் பிறகு பிரதமர் பொறுப்பு வகித்த மகாதீர், முஹிடின் மற்றும் சப்ரி, ஆகிய மூவருமே அதனை நிலைநாட்டவில்லை என்று நம்பப்படுகிறது. வெளிப்படைத் தன்மை இல்லாததால் அவர்களுடைய காலக்கட்டத்தில் நம் பிள்ளைகளுக்கு எத்தனை இடங்கள்தான் வழங்கப்பட்டன எனும் விவரம் கூட நம் இன அரசியல்வாதிகள் உள்பட யாருக்குமே தெரியவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் பிரதமரின் யோசனை அமுலாக்கம் கண்டால் ஏற்கெனவே நமக்குக் கிடைத்த இடங்களைக் கூட நாம் இழக்கக் கூடும் எனும் உண்மையை நாம் மறுக்கலாகாது.

உதாரணத்திற்கு, நம் சமூகத்தைச் சேர்ந்த 1,500 பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால், ‘8ஏ’ மற்றும் ‘9ஏ’ உள்பட சிறப்பு தேர்ச்சி பெறும் நம் மாணவர்களுக்கு அந்த இடங்கள் வழங்கப்படும்.

ஆனால் அடுத்த ஆண்டு இந்த நடைமுறை மாற்றம் காணும் பட்சத்தில், நம் இனத்தைச் சேர்ந்த மாணவர்களில் 1,000 பேர் மட்டுமே ’10ஏ’ பெறுகிறார்கள் என்றால் 500 இடங்களை இயல்பாகவே நாம் இழந்துவிடுவோம். இது முதலுக்கே மோசமாக அல்லவா இருக்கிறது!

தமிழ், தமிழ் இலக்கியம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடங்களை எடுக்காத மானவர்களில் பலர் 9 பாடங்களை மட்டுமே தேர்வு பாடங்களாகக் கொண்டுள்ளனர். அன்வாரின் கூற்றுப்படி பார்த்தால் இப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எல்லா பாடங்களிலும் ‘ஏ’ பெற்றாலும் மெட்ரிக்குலேஷன் வகுப்புகளை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

மிகக் குறைவான மதிப்பெண்களை எடுக்கும் பிற இன மாணவர்களுக்கு தாராளமாக இடங்கள் வழங்கப்படும் வேளையில், நம் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் குறைந்தது ’10ஏ’ எனும் கட்டுப்பாடு? எனும் கேள்வியும் எழவேச் செய்கிறது. அவர்களோடு ஒப்பிடும் போது ‘8ஏ’ மற்றும் ‘9ஏ’ பெறும் நம் மாணவர்கள் எவ்விதத்தில் சளைத்தவர்கள்? ஏன் இவர்கள் ஒதுக்கப்பட வேண்டும்?

இந்த புதிய நடைமுறையினால் பூமிபுத்ராக்களின் வாய்ப்புகள் ஒருபோதும் பாதிக்கப்படாது எனும் கருத்தை அன்வார் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பேசுவதையும் நம்மால் காண முடிகிறது. அவ்விவகாரத்தில் பிரதமர் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பதையே இது புலப்படுத்துகிறது.

நாடளாவிய நிலையில் இருக்கும் மெட்ரிக்குலேஷன் கல்விக் கூடங்களில் உள்ள மொத்தம் 40,000 இடங்களில் 90% பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் 4,000 இடங்கள்தான் பூமிபுத்ரா அல்லாதாருக்கு.

பிரிதொரு கோணத்தில் பார்ப்போமேயானால் ஒரு வேளை ’10ஏ’ எடுக்கும் இந்திய, சீன மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது என்றால் பூமிபுத்ராக்களின் ஒதுக்கீட்டில் கை வைக்கப்படுமா? என்பது மற்றொரு கேள்வி. ஆனால் ஒரு போதும் அதற்கான சாத்தியமே இல்லை என்று நம் எல்லாருக்குமே தெரியும்.

இப்படியொரு சூழல் உருவாகுமேயானால் அநாவசியமானதொரு இடியப்ப சிக்கலுக்குதான் அது வித்திடும். பிறகு நம் பிள்ளைகளுக்கு ‘பழைய குருடி கதவைத் திறடி’ எனும் நிலைப்பாட்டில் கண்ணீர் கதை தொடரும்.

ஒரு வேளை ’10ஏ’ எடுக்கும் இந்திய, சீன மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்ட வாய்ப்பே இல்லை என அனுமானிக்கப்பட்டதோ என்று கூட நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.

எனவே அன்வாரின் அறிவிப்பில் வெளிச்சம் விழாத விஷயங்கள் நிறையவே இருப்பதாலும் இந்த மாற்றம் நமக்கு பாதகத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகத் தென்படுவதாலும் நம் தலைவர்கள் அவரை உடனே சந்தித்து இதற்கு முறையான தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அவரிடம் பரிந்துரைக்க வேண்டும்.

சாதாரண குப்பனோ சுப்பனோ இதனை செய்ய முடியாது. நம் தலைவர்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அன்வாரிடம் நற்பெயரை சம்பாதிக்கும் எண்ணத்தில்  அவசரக் குடுக்கையாக அவருடையத் திட்டத்தை பாராட்டி அங்கீகரிக்கும் தலைவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.

எனவே இதனையும் அரசியல் கோணத்தில் அணுகாமல் தீர ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவதே சிறப்பு. இந்த ’10ஏ’ விவகாரமெல்லாம் நமக்கு சரியாக வராது. வெறும் கண் துடைப்பைப் போல்தான் உள்ளது.

நஜிப் தனது ஆட்சி காலத்தின் போது நமக்கென 700 இடங்களை கூடுதலாக ஒதுக்கி மொத்த எண்ணிக்கையை 2,200ஆக உயர்த்தியதைப் போல, தற்போதைய சூழலில் நம் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 3,000 இடங்கள் வேண்டும் எனும் ஒரு கோரிக்கையை நம் தலைவர்கள் முன் வைக்க வேண்டும்.