தேர்தல் பிரசாரத்திற்கு அரசு மையங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, முறைகேடுகள் நடப்பதற்கான ஆதாரம் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.
மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது, ”வேட்பு மனு தாக்கல் நாள் வந்தவுடன், (அரசு இயந்திரத்தை) பயன்படுத்த முடியாது என்ற பென்டாங்-கின் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்” என்று அவர் கூறினார்.
“அமைச்சரவையின் முடிவுக்கு மாறாக, எந்த அமைச்சரோ அல்லது அரசு நிறுவனமோ, பிரச்சாரத்தின் போது, அரசு மையங்களைப் பயன்படுத்தியதாக ஆதாரம் இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருப்பினும், நியமன நாளுக்கு முன்பு செய்யப்பட்ட திட்டங்கள் தொடர்வது தொடர்பான அறிவிப்புகள் ஒரு பிரச்சினை அல்ல என்று அன்வார் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற சுங்கை பாக்பாப் இடைத்தேர்தலின் போது துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் அறிக்கைகள் தொடர்பாக அவாங் ஹாஷிம் (PN-பென்டாங்) எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், ஒற்றுமை அரசாங்கம் சுங்கை பக்காப்பில் தமிழ் மொழிப் பள்ளி மற்றும் மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையம் ஆகிய இரண்டு திட்டங்களை மேற்கொள்ளும் என்று ஜாஹிட் கூறினார்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆய்வு மயம் பெர்செ இதுகுறித்து புகார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
-fmt