மலேசியாவில், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சேத்ரா அகாடமியை நடத்தி வருகின்ற நடனக் கலைஞர் ஸ்ரீமதி அப்சரா ராம் கோபாலின் மாணவியான அனுசா ஆறுமுகம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வருகின்ற 20.7.2024, சனிக்கிழமையன்று பரத நாட்டிய நிகழ்வு ஒன்றை அரங்கேற்ற உள்ளார்.
‘பிரார்த்தனா’ என்ற அந்த நிகழ்வு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்கேத்ரின் வலாகத்தில் மாலை மணி 4.45-க்கு நடைபெற உள்ளது. சுமார் 90 நிமிடங்கள் கொண்ட இந்த நடனம் ஷ்ரத்தா மற்றும் பக்தி ஆகியவற்றின் நித்திய மதிப்புகளுக்கான அஞ்சலியாகும்.
அவரின் நடன குரு ஸ்ரீமதி அப்சரா ராம் கோபால் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடனக் குரு கோபாலகிருஷ்ணன் மற்றும் குசும் கோபாலகிருஷ்ணனின் மகள் ஆவார். அப்சரா தனது டிப்ளோமா மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பைத் தென்னிந்தியாவின் சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாசேத்ராவில் கற்று முதல் நிலையில் தேர்வானவர். மேலும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் உலக வரலாற்றுத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
ஸ்ரீமதி அப்சரா மற்றும் அவரது கணவர் ஸ்ரீ ராம் கோபால் சிவதாஸ் ஆகியோர் மலேசியாவில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக நடனப் பள்ளியான க்ஷேத்ரா அகாடமியை நடத்தி வருகின்றனர்.
அப்சரா ராம் கோபாலின் மாணவியான அனுசா ஆறுமுகம், 25 ஆண்டுகளாகப் பரதநாட்டியம் கற்று வருகிறார்.
ஒரு காலத்தில் கலையின் மிகவும் மரியாதைக்குரிய பாதுகாவலர்களாக இருந்த தேவதாசிகள், இந்தக் கலைவடிவத்தை உயிருடன் வைத்திருப்பதில் அவர்கள் அனுபவித்த அனைத்துப் போராட்டம் மற்றும் அநீதிகளை நினவுகூற இந்த நடனத்தை அரங்கேற்றுவதாகக் கூறுகிறார்.
அனுசா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலைப் பட்டமும், சர்வதேச சட்டம் மற்றும் அரசியல் துறையில் இன்னொரு முதுகலைப் பட்டமும் பெற்றவர். அவர், தற்போது லண்டன் ஸ்கூல் ஆப் இக்கோனொமிக்ஸ் (LSE)-யில் தனது முனைவர்ப் பட்டத்திற்கான கல்வியைத் தொடர உள்ளார்.
தனது பரத நாட்டியம் பிரசித்தி பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெருவதில் பெருமை கொள்ளும் அனுசா, அதற்கான ஏற்பாடுகளும் அனுமதியும் கிடைக்க தனது கணவர் வருண் வாரியர் துணை புரிந்ததாக கூறுகிறார்.