ஆறு வயது சிறுமி அல்பர்டைன் லியோ கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபர் மேலும் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நீதவான் நூர்ஃபஸ்லின் ஹம்தான் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
31 வயதான நபரின் காவலை நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க நூர்ஃபாஸ்லின் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 365 மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காகச் சந்தேக நபர் ஜூலை 23 முதல் இன்று வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னதாக, சந்தேக நபர் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஊதா நிற சட்டை மற்றும் கைவிலங்கு அணிந்து காலை 8.50 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.
இன்று காலை, ஜொகூர் காவல்துறைத் தலைவர் சிபி எம் குமார், ஜூலை 23 அன்று சிலாங்கூர், படாங் கலியில் உள்ள பட்ஜெட் ஹோட்டலில் பாதிக்கப்பட்டவருடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிரான மேலதிக விசாரணைகளைச் செயல்படுத்துவதற்காகக் காவலை நீட்டிக்கக் கோரினார்.
ஜூலை 20 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் ஜொகூரில் உள்ள இஸ்கந்தர் புத்தேரியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் சிறுமியைக் காணவில்லை என்று அவரது தந்தை புகார் செய்தார்.