14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட் வலுப்பெற்றுள்ளது -அன்வார்

நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவாக 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட் தற்போது வலுவான நிலையில் உள்ளது என்று பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

சபா பிகேஆரின் மாநாட்டில் பேசிய அவர், நாணய மதிப்பு குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி கூறினாலும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து ரிங்கிட் நேர்மறையான மீட்புப் போக்குகளைக் காட்டியது என்றார்.

ரிங்கிட் ஆசியாவிலேயே வலிமையானது. ஏன்? அது என்னால் அல்ல. அரசின் கொள்கைகள் மற்றும் நமது ஒருமித்த கருத்துதான் இதற்குக் காரணம் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் ஐக்கிய கூட்டணி அரசாங்கத்தின் தலைவருமான அன்வார் கூறினார்.

சர்வதேச அளவில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, ​​தனது முயற்சிகள் சபா உள்ளிட்ட மாநிலங்களை முக்கிய முதலீட்டு மையங்களாக, குறிப்பாக சுற்றுலாத்துறையில் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அன்வார் கூறினார்.

சீனா, ஜப்பான் அல்லது ஜெர்மனி என நான் செல்லும் ஒவ்வொரு இடத்திலும், சபா உட்பட எண்ணெய் மற்றும் எரிவாயு, சுற்றுலா, புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதை நான் எப்போதும் சுட்டிக்காட்டுகிறேன். நான் மலேசியா மற்றும் சபா இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.

சபாவின் உணர்வுகளை தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துபவர்களால் ஏமாற வேண்டாம் என்று சபா மக்களை அன்வார் கேட்டுக் கொண்டார்.

கடுமையான வறுமை, தண்ணீர் மற்றும் மின்சாரம், வெள்ளம் மற்றும் சேதமடைந்த சாலைகள் போன்ற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். (ஒரு தலைவர்) ‘சபாவுக்காக சபா’ என்று கூறினால், சபா உண்மையிலேயே அதன் மக்களுக்கானதா அல்லது ‘டவுக் பாலக்’ (மர அதிபர்கள்) மற்றும் திட்டங்களுக்காக மட்டும்தானா என்று அவரிடம் கேளுங்கள், என்றார் அன்வார்.