மலேசியா சமீபத்தில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், சில கண்காணிப்பாளர்கள் இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கமுடியது என்று கூறுகிறார்கள்.
அன்வார் ஆட்சியின் சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டின் மத்தியில், அதிகாரிகள் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கும்போது, கடினமான கேள்விகளை எதிர்கொள்கிறார்கள் என கண்காணிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு உண்மையான காரணங்கள் இருந்தாலும், அரசின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சமூக ஊடக பதிவுகளை நீக்குமாறு அடிக்கடி கோருவது போன்ற செயல்கள் பேச்சு சுதந்திரத்தையும் விமர்சனத்தையும் அடக்குவதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாத ஒன்றாக அமைகிறது.
போலி செய்திகள், மோசடிகள் மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற சமூக ஊடக (ஆன்லைன்) விளைவுகளை எதிர்கொள்ளும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மலேசிய அரசு கூறியுள்ளது. ஆனால், நாட்டில் எதிர்க்கட்சிகள் கடந்த தேர்தல்களில் சமூக ஊடகங்களை வெற்றிகரமாக பயன்படுத்தி முன்னேற்றங்களை அடைந்துள்ளதால், நிபுணர்கள் இதற்கு அரசியல் நோக்கம் இருக்கிறதா என கேள்வி எழுப்புகிறார்கள்.
மலேசிய சந்தையை சேவையளிக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கைகளை பெரிய தொழில்நுட்ப சமுக தளங்கள் விருப்பம் இன்றி பின்பற்ற வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதனால் உள்நாட்டின் பயனாளர்களிடமிருந்து எதிர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
DataReportal இன் தகவலின்படி, 2024 ஜனவரியில் மலேசியாவில் 28.68 மில்லியன் சமூக ஊடக பயனாளர்கள் இருப்பதாகவும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 83.1% ஆகும் என காட்டியுள்ளது.
மலேசியாவில் சமூக ஊடக ஒழுங்குபடுத்தலில் கடந்த சில வாரங்கள் பரவலான மாற்றங்களை சந்தித்துள்ளன. ஹமாஸ் தொடர்பான பதிவுகளை நீக்குவதற்கான மோதல் மெட்டா (Meta) மற்றும் அரசாங்கத்திற்கிடையே ஏற்பட்டது, மேலும் மலேசியாவின் சொந்த சமூக ஊடக பயன்பாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் மிரட்டலும் இதற்குள் அடங்குகிறது.
ஜூலை 5 அன்று ராஜேஸ்வரி அப்பாவு என்ற ஒரு மலேசிய டிக்டாக்கரின் தற்கொலை, ஆன்லைன் துன்புறுத்தலின் காரணமாக ஏற்பட்டது. இந்நிலையில், அரசாங்கம் ஆன்லைன் துன்புறுத்தலை குற்றமாக்குவதற்கான சட்டத்தை கருதிக்கொண்டுள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆன்லைனை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.
ஜூலை 27 அன்று, மலேசிய அரசு, 2025 முதல் நாட்டில் குறைந்தது எட்டு மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் உள்ள அனைத்து சமூக ஊடக மற்றும் இணைய செய்தி பரிமாற்ற தளங்களும் ஒரு “Applications Service Provider Class (ASP(C))” உரிமத்தை பெற வேண்டும் என அறிவித்தது. இந்த உரிமத்தை பெறத் தவறினால், தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அறிவித்தது.
இந்த புதிய உரிமத் தேவை, சமுதாய குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த நடவடிக்கையை, ஆன்லைன் குற்றங்கள், மோசடிகள், பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள தேவையானது என நியாயப்படுத்துகிறது. ஆனால் கவனிப்பாளர்கள், இது பேச்சு உரிமையை அடக்குவதற்கான அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், அரசாங்கத்தின் விமர்சகர்களை அச்சுறுத்துவதற்கும், அரசியல் நோக்கங்களுக்காகவும் துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கலாம் என எச்சரிக்கிறார்கள்.
ஜூன் மாதத்தில், டிக் டாக் மற்றும் மெட்டா (Meta:பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நடத்துனர்) வெளியிட்ட அறிக்கைகள், பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரத்தில் உள்ள முதல் ஆண்டில், குறிப்பாக இரண்டாம் பாதியில், தணிக்கை செய்ய கோரிக்கைகளில் அதிகரிப்பை காட்டியுள்ளன என்கிறது.
2023-இன் இரண்டாம் பாதியில், டிக் டாக், மலேசிய அரசாங்கத்திடமிருந்து 1,862 உள்ளடக்க நீக்குவதற்கான கோரிக்கைகளை பெற்றதாகக் கூறியது, இது 2022-இன் இரண்டாம் பாதியில் 55 கோரிக்கைகளுடன் ஒப்பிடும்போது, இது உலகளவில் மிக அதிகமாகும். அன்வார் நவம்பர் 2022-இல் 15வது பொதுத்தேர்தலில் (GE15) அதிகாரத்தில் வந்தார்.
மேலும், 2023-இன் இரண்டாம் பாதியில் மலேசியாவில் 4,700-க்கும் மேற்பட்ட அணுகலை கட்டுப்படுத்தியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 500-க்கும் குறைவாக இருந்தது என மெட்டா கூறியுள்ளது. இது மலேசிய தகவல் மற்றும் பல்துறை ஆணையம் (MCMC) மூலம் தகவல் அளிக்கப்பட்டதாகும், இதில் சட்டவிரோத சூதாட்டம், மோசடிகள், மதத்தின் அடிப்படையில் வெறுப்பு பேச்சு, இனவாதத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கம், மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் உள்ளடக்கம் ஆகியவை அடங்கும் என மெட்டா கூறியுள்ளது.
மலேசிய அரசாங்கத்தின் சமீபத்திய சமூக ஊடகங்களில் உள்ள உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதன் மூலம் தணிக்கை குறித்த கவலைகள் எழுந்துள்ளன. விமர்சகர்கள், இது அரசியல் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் அமைதியாக்குவதற்கான முயற்சியாகும் என்று வாதிக்கிறார்கள். அரசாங்கம் இன மற்றும் மதம் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களில் தூண்டுதலான பதிவுகளை கட்டுப்படுத்த முயல்கிறது என்று கூறினாலும், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாகவே இந்த நடவடிக்கைகள் விளங்குகிறது என்று சுதந்திர ஆய்வாளர் அஸ்ருல் ஹாதி அப்துல்லா சானி குறிப்பிடுகிறார். அரசாங்கத்தின் அணுகுமுறை சொல்வதொன்று செய்வதொன்று என்றும், அரசியல் சூழலை நிர்வகிக்க முடியாததற்கான பிரதிபலிப்பாக விளக்குகிறது என்றும் தணிக்கையின் மூலம் வாக்குகளை வெல்ல முடியாது என்றும் எச்சரிக்கையளிக்கிறார். பாக்காத்தான் ஹராப்பானின் நடவடிக்கைகள், அவர்கள் விமர்சித்த முந்தைய பாரிசான் அரசாங்க (BN) நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்ததாக உள்ளன” என்று கூறினார். முந்தைய ஆட்சியில், பாரிசான் அரசு, எதிரிகளாகக் கருதப்படும் செய்தித்தாள்கள், சமூக போராட்டவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளை ஒழிக்க, ஊடக சட்டங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் மலேசியாவின் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் 73வது இடத்திலிருந்து 107வது இடத்திற்கு வீழ்ச்சிக்கு காரணமாகவும் உள்ளது.
அரசாங்கம், இணையத்தில் உள்ள தீவிரவாதம், வெறுப்புத்தொகுப்புகள் மற்றும் பிற ஆபத்தான உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறது. இதற்காக அரசாங்கம், இணைய பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த கடுமையான விதிகளை அமல்படுத்துவதற்குப் பதிலாக, நிறுவனங்களுடன் இணைந்து உள்ளமைவுகளை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவும் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், அரசாங்கம் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் அரசியல் நோக்கமுடையதாக இருக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக முந்தைய தேர்தலில், மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெற டிக்டாக் போன்ற தளங்களை எதிர் கட்சிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதை சுட்டிக் காட்டினார்.
KUASA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரபா கணேசன், மலேசியாவின் புதிய சமூக ஊடக உரிமம் வழங்கும் திட்டம், அரசாங்கம் விமர்சனங்களை அடக்க முயல்வதாகவும், மற்றும் தேர்தலில்ன் பொது தம் ஆட்சியை பாதுகாக்கும் ஒரு வழியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்தார். MCMC நாட்டில் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடக மற்றும் இணைய செய்தி பரிமாற்ற தளங்களும் உரிமம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள். இப்படி உரிமம் பெறாத தளங்கள் மலேசியாவில் செயல்பட முடியுமா என்பது குறித்து கேள்வி எழுப்பினார், கணேசன்.
துணை பிரதமர் அகமட் ஜாஹித் ஹமீதி தலைமையில் மலேசிய அரசு, கட்டுப்பாட்டுக்கு உட்படாத சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ளது. ஆனால் தகவல் தொடர்பு அமைச்சர் திரு. பஹ்மி பாசில் அதற்கான உடனடி திட்டங்கள் ஏதும் இல்லை என்று மறுத்துள்ளார். மலேசியாவில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, மெட்ட, டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற பெரிய தளங்களுடன் ஒத்துழைப்பை வலியுறுத்துவதன் மூலம் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்த அரசு முயற்சிக்கிறது. MCMC குறிப்பிட்ட தளங்களின் பெயர்களை வெளியிடவில்லை. ஆனால் உள்ளூர் ஊடகங்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் X ஆகியவை 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டவை என தெரிவிக்கின்றன. அரசாங்கங்கள் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதால் ஏற்படக்கூடிய தாக்கத்தின் காரணமாக, இந்த தளங்களுக்கு ஒத்துழைப்பதை தவிர வேறு வழியில்லை என டெய்லர் பல்கலைக்கழகத்தில் ஊடகம் மற்றும் தொடர்பு துறையில் மூத்த ஆசிரியர் டாக்டர் பெஞ்சமின் லோ நம்புகின்றனர். தற்போதைய தரவுகளின்படி, மெட்டாவின் தளங்கள் அகற்றல் கோரிக்கைகளுக்கு உயர் இணக்க விகிதத்தைக் கொண்டுள்ளன, ஆனால் டிக்டாக்கின் அகற்றல் கோரிக்கைகளுக்கு இணக்கம் குறைவாகவே உள்ளது என குறிக்கின்றன.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி, தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பாசில், மலேசியர்களுக்கான அரசாங்க அனுமதியுடன் கூடிய ஒரு சமூக ஊடகத் திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியத்தை முன்வைத்தார். தற்போதைய தளங்கள் பயனர் பாதுகாப்பை உறுதி செய்யாமல் மலேசியர்களிடமிருந்து லாபம் ஈட்டும் நோக்கில் மட்டும் உள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரு சமூக ஊடகத் திட்டத்தை உருவாக்குவதில் உள்ள சவால்களை அவர் ஒப்புக்கொண்டார், அதில் உயர்ந்த செலவுகள் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் தேவையும் அடங்கும் என்கிறார். பஹ்மி பின்னர் தனது இந்த கருத்துக்களில் இருந்து பின்வாங்கி, அரசாங்கத்திற்கு உடனடி திட்டங்கள் இல்லை என்றாலும், தனியார் நிறுவனங்கள் இதனை உருவாக்க விரும்பினால், அதற்கு தடை ஏதும் இல்லை என்றார்.
புதிய தளத்தின் சாத்தியத்தைப் பற்றியம் சவால்கள் குறித்தும் நிபுணர்கள் சந்தேகங்களை வெளியிட்டனர். முந்தைய அரசு நடத்தும் உள்ளூர் தயாரிப்புகள் பல தோல்வியடைந்துள்ளன, இது புதிய திட்டத்தின் வெற்றியை சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. அப்படியே புதிய தளங்களை உருவாக்கினாலும், பயனர்களை ஈர்ப்பது மிகவும் கடினம், ஏனெனில் மக்கள் ஏற்கனவே நிலையான உலகளாவிய தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். 2019 இல் “பறக்கும் கார்” திட்டத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பைப் போல, புதிய உரிமத்திட்டத்திற்கு மக்களிடையே எதிர்ப்பும் இருக்கலாம், என்றும் எச்சரித்தார் டாக்டர் பெஞ்சமின் லோ. இந்த சவால்கள், மலேசியாவில் புதிய சமூக ஊடகத் திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை பெரிதும் பாதிக்கின்றன.
https://www.channelnewsasia.com