செப்டம்பர் 2 முதல், தங்கள் பயணத்தைத் தொடர விரும்பாத பயணிகளுக்கு ஐந்து மணிநேரம் மற்றும் அதற்கு மேற்பட்ட விமான தாமதங்களுக்கு முழு பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான விருப்பத்தை விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
இந்தச் செப்டம்பரில் வர்த்தமானியில் வெளியிடப்படும் Malaysian Aviation Commission (Mavcom) மூலம் போக்குவரத்து அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட மலேசிய விமான நுகர்வோர் பாதுகாப்புக் குறியீடு 2016 (Malaysian Aviation Consumer Protection Code) புதிய மேம்பாடுகளில் இதுவும் ஒன்றாகும் என்றார்.
“அசாதாரண சூழ்நிலைகளால் ஏற்படும் விமான இடையூறுகளுக்கு, விமான நிறுவனங்கள் முதலில் பணம் செலுத்தும் முறையிலேயே பணத்தைத் திரும்பப்பெற வேண்டும்”.
பயண வவுச்சர்கள் அல்லது கிரெடிட் ஷெல்கள் போன்ற மாற்றுத் திருப்பிச் செலுத்தும் முறைகளையும் விமான நிறுவனங்கள் வழங்க முடியும். இருப்பினும், பயனர்கள் தாங்கள் விரும்பும் பணத்தைத் திரும்பப்பெறும் முறையைத் தேர்வுசெய்ய உரிமை உண்டு, ”என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பயனர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெறும் காலம் 30 நாட்கள் என்றும் அது பயணி பயன்படுத்தும் கட்டண முறையைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.
மற்ற மேம்பாடுகள்
மலேசியன் ஏர்லைன்ஸ் பெர்ஹாட் (MAB) விமான தொழில்நுட்ப சிக்கல்களைச் சமாளிக்க ஒரு தணிப்பு திட்டத்தைச் செயல்படுத்தும் என்று லோக் மேலும் கூறினார்.
MAB ஏர் ஆபரேட்டரின் சான்றிதழ் புதுப்பித்தல் காலம் மூன்று ஆண்டுகளிலிருந்து ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
MACPC இன் பிற மேம்பாடுகள், எரிபொருள் கூடுதல் கட்டணம், வரிகள், கட்டணங்கள் மற்றும் உமிழ்வு வரிகள், பயணிகள் சேவைக் கட்டணம், கார்பன் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் ஆகியவற்றின் கட்டாயத் திருப்பிச் செலுத்துதல் ஆகும்.
“ பயன்படுத்தப்படாத விமானங்களுக்கான மீட்பு மதிப்புள்ள டிக்கெட்டுகள் (refundable ticket) மற்றும் மீட்பு மதிப்பு இல்லாத டிக்கெட்டுகள் (non-refundable ticket) இரண்டிற்கும் இது பொருந்தும்,” என்றார்.
புதிய மேம்பாடுகளின் மூலம், அனைத்து ரத்து செய்யப்பட்ட விமானங்களும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயண முகவர் தளங்கள் உட்பட அனைத்து முன்பதிவு அமைப்புகளிலிருந்தும் அகற்றப்பட வேண்டும் என்று லோக் கூறினார்.
“விமானத்தை அதிகமாக முன்பதிவு செய்ததால் விமானத்தில் ஏறுவதற்கு மறுக்கப்பட்டால், செக்-இன் கவுண்டரிலோ அல்லது புறப்படும் வாயிலிலோ வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும். விமானத்தில் ஏறிய பயனர்களை மறுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது”.
நுகர்வோர் புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு தற்போது ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வார அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அசாதாரண சூழ்நிலைகள் அல்லது தவிர்க்க முடியாத தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இருந்தால் தவிர, உண்மையான புறப்படும் நேரத்திற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாகத் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் நுகர்வோருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று லோக் கூறினார்.
MACPC உடன் இணங்கத் தவறினால் அதிகபட்ச நிதி அபராதம் ரிம 200,000 ஆகலாம் என்றும், இரண்டாவது அல்லது அதற்குப் பின் இணங்கத் தவறினால், முதல் நிதி அபராதத்தின் 10 மடங்குத் தொகை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
2016 முதல் MACPC உடன் இணங்கத் தவறியதற்காக விமான நிறுவனங்களுக்கு மொத்தம் RM 4.7 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
MACPCயை மேம்படுத்துவதன் மூலம், விமானப் பயணிகளுக்கு விமானப் பயணத்திற்கான மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றார்.
“Mavcom வாடிக்கையாளர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள தொழில்துறை வரையறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிறுவனங்களின் செயல்திறனை தொடர்ந்து கண்காணிக்கும்,” என்று அவர் கூறினார்.