இந்த ஆண்டு மே மாதம் உலு திராம் சம்பவத்தில் கொல்லப்பட்ட காவலர்களைப் பற்றிப் முகநூலில் அவதூறான கருத்துக்களை அனுப்பியதாக உள்ளூர் நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழன் இரவு 8 மணியளவில் ஜொகூரில் உள்ள மசாயில் உள்ள வீட்டில் 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாகத் தபா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான அஹ்மத் அஸ்ஸா பஹ்மி அஸ்ஹரின் குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அளித்த புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த சந்தேக நபரிடம் இருந்த கைத்தொலைபேசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் சிறு குற்றச் சட்டம் 2001 இன் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காகச் சந்தேக நபர் இப்போது திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் இருப்பதாக நைம் கூறினார்.
மே 17 அன்று உலு திராம் காவல் நிலைய தாக்குதலில், அஸ்ஸா, 22, மற்றும் முஹமட் சயாபிக் அகமது சைட், 24, ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மற்றொரு காவல்துறை அதிகாரி, முகமட் ஹசிப் ரோஸ்லான், 38, தோள்பட்டை மற்றும் இடுப்பில் இரண்டு துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்தார்.