இராகவன் கருப்பையா – கடந்த மாதம் 23ஆம் தேதியன்று தலைநகர் மல்ஜிட் இந்தியா பகுதியில் இந்திய சுற்றுப்பயணி விஜயலட்சுமி புதையுண்டு காணாமல் போன சம்பவம் நம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
அந்த அசம்பாவிதம் தொடர்பாக அரசாங்க நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இன்னமும் கூட தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் விஜயலட்சுமியின் குடும்பத்திற்கு மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ள குறிப்பிட்ட ஒரு தொகையை பலரும் பலவிதமாக விமர்சனம் செய்து வருவது தேவையில்லாத குழப்பத்திற்கு வித்திட்டுள்ளதைப் போல் தெரிகிறது.
அந்த விபத்துக்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துவது ஒரு புறமிருக்க, விஜயலட்சுமியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் இரவு பகலாக நடத்திய போராட்டத்தை நாம் புறம்தள்ள முடியாது.
எட்டு நாள்களுக்குப் பிறகு சகல முயற்சிகளும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் குடும்பத்திற்கு நம் அரசாங்கம் 30 ஆயிரம் ரிங்கிட்டை முதல்கட்ட உதவி நிதியாக வழங்கியது.
இந்தத் தொகை நல்லெண்ண அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதே ஒழிய இது இழப்பீட்டுத் தொகையல்ல என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஸலேஹா மிகக் தெளிவாக விளக்கமளித்தார்.
அக்குடும்பத்திற்கு இப்பீடு வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆக அமைச்சரவை முடிவெடுத்த பிறகு விஜயலட்சுமி குடும்பத்தாருக்கு முறையான ஒரு இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் வழங்கும் என்பதுதான் இதன் பொருள். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இதனை சரிவர புரிந்து கொள்ளாத பலர், “ஒருவருடைய உயிரின் மதிப்பு 30 ஆயிரம் ரிங்கிட்தானா?” என சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தைச் சாடி மானாவாரியாக வசைப்பாடி வருகின்றனர்.
இவர்களோடு சில தினங்களுக்கு முன் ம.இ.கா. துணைத் தலைவர் சரவணனும் சேர்ந்து கொண்டதுதான் நமக்கு வியப்பாக உள்ளது.
“விஜயலட்சுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள 30 ஆயிரம் ரிங்கிட்டில் ம.இ.கா.வுக்கு திருப்தியில்லை. ஒரு உயிரின் விலை வெறும் 30 ஆயிரம் ரிங்கிட் மட்டும்தானா?”
“மலேசியர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் அதற்கும் 30 ஆயிரம் ரிங்கிட்தானா?” என்று அவர் கேள்வி எழுப்பியதாக தமிழ் தொலைக்காட்சியொன்று தனது செய்தியில் குறிப்பிட்டது.
சாமானிய மக்கள் வெளியிட்ட ஒரு கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே அனைத்துத் தரப்பினும் இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டு கருத்துரைத்தால் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்க முடியும்.