‘வரலாற்றில் வாழ்பவர்கள்’ – நூல் வெளியீட்டு விழா

இராகவன் கருப்பையா – எழுத்தாளர் ஆ.குணநாதனின் ‘வரலாற்றில் வாழ்பவர்கள்’ எனும் ஒரு நூல் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியீடு காணவிருக்கிறது.

25, ஜாலான் பெண்டஹரா 10/2, பெண்டஹரா விலா, கோல சிலாங்கூர், எனும் முகவரியில் உள்ள அவருடைய இல்லத்தில் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதோடு தனது பிறந்தநாளையும் ஒரு சேர அவர் கொண்டாடவிருக்கிறார்.

எழுத்துத் துறையில் பல்லாண்டு காலமாக தடம் பதித்துள்ள குணநாதன் ஒரு வரலாற்று ஆய்வாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள்களுக்கு முன் ‘சயாம் மரண ரயில்’ தொடர்பான தகவல்களை அதிக அளவில் திரட்டி நிறைய கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான குணநாதன், ம.இ.கா., மணிமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிர பங்காற்றியுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் சில நண்பர்களுடன் சேர்ந்து கோல சிலாங்கூர் வட்டாரத்தில் இந்திய அருங்காட்சியகம் ஒன்றையும் அவர் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்திய பாரம்பரியப் பொருள்களை சேகரித்து அந்த அருங்காட்சியகத்தில் அவர் பார்வைக்கு வைத்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பலருடைய விவரங்களை நீண்ட நாள்களாக சேகரித்து ஆய்வு செய்து சுவைபட இந்நூலில் குணநாதன் எழுதியுள்ளார்.

மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றமும் எழுத்தாளர் சங்கமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் முனைவர் இராஜகோபால் நூல் அறிமுகம் செய்யவுள்ளார்.