வரைவை நிராகரிப்பதற்கான பெரிகத்தான் நேசனலின் ஒருமித்த முடிவிற்குப் பிறகு, எதிர்க்கட்சி ஒதுக்கீடுகுறித்த அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) உள்ளடக்கத்தைத் துணைப் பிரதமர் II பதில்லா யூசோப் வெளிப்படுத்தினார்.
இந்த வரைவு கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ள சில விதிகளைப் பாதித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதின் கூற்றை “அடிப்படையற்றது” என்று அரசாங்க நாடாளுமன்ற தலைமைக் கொறடா விவரித்தார்.
“இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட்டதன் மூலம், இந்த வரைவு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கூறும் அனைத்துக் கூற்றுகளும் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை பொதுமக்கள் தாங்களாகவே தீர்மானிக்க முடியும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிராகரிப்புக்கான காரணங்களை மேற்கோள் காட்டி, ஹம்சா நேற்று எதிர்க்கட்சியால் கோடிட்டுக் காட்டப்பட்ட நான்கு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறினார்; மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராவின் அரசியலமைப்பு சலுகைகளைப் பாதிக்கும் சாத்தியம்; கலாச்சார, தார்மீக மற்றும் மதக் கொள்கைகளுக்கு முரணான நிலைமைகள்; தவறான விளக்கம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் சாத்தியம்; மேலும் இது எம்.பி.க்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு ஒப்பானது.