GISB Holdings உடன் தொடர்புடைய வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன், பயிற்சி, எதிர்காலம் மற்றும் மதக் கல்வி ஆகியவற்றில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் கவனம் செலுத்தியது என்று துணை பிரதமர் அகமது ஜஹித் ஹமிடி தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள செர்டாங்கில் நடந்த Laman Usahawan Desa@Maha 2024 நிகழ்வைப் பார்வையிட்டபிறகு பேசிய ஜாஹிட், மதக் கல்வியை வழங்குவது உட்பட இந்த இளைஞர்களுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பாக இது இருக்கும் என்றார்.
மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பதின்வயதினர்களுக்கு முறையான பராமரிப்பை உறுதி செய்வதற்காகச் சமூக நலத்துறை (JKM) பிரத்யேக வசதிகளை அமைக்கும் என்றார்.
“இது அவர்கள் நன்றாகக் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதாகும்,” என்று அவர் கூறினார்.
கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) திட்டங்களில் பதின்வயதினர் சேர முடியுமா என்பது குறித்து, இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (Jakim) மற்றும் JKM ஆகியவற்றுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று ஜாஹிட் கூறினார்.
“16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றப் படிப்புகள் இருப்பதாக நம்பும் பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சருடன் (முகமது நயிம் மொக்தார்) நான் விவாதித்தேன்,” என்று அவர் கூறினார்.
இந்த நபர்கள் GISB Holdings உடன் தொடர்புடைய தொண்டு இல்லங்களில் இருந்ததைக் கருத்தில் கொண்டு, மதக் கல்வி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது, ஜாஹிட் மேலும் கூறினார்.
GISB-இணைக்கப்பட்ட தொண்டு இல்லங்களில் சோதனையின்போது காவல்துறையினரால் மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கல்வி மற்றும் எதிர்கால திசையில் ஆதரவைப் பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று சமீபத்தில் முகமட் நயிம் அறிவித்தார்.
அந்தச் சோதனைகளில், சிலாங்கூரில் உள்ள 18 தொண்டு இல்லங்களிலிருந்தும், நெகிரி செம்பிலானில் உள்ள இரண்டு தொண்டு நிறுவனங்களிலிருந்தும் ஒன்று முதல் 17 வயது வரையிலான 402 குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் காவல்துறையினர் மீட்டனர்.