குழந்தையை எரியும் குப்பை மேட்டில் நிறுத்திய தந்தை கைது செய்யப்பட்டார்

தனது குழந்தையை அடித்து, சிறுவனை எரியும் குப்பைகளுக்கு இடையில் நிறுத்தியதாக ஒரு நபரைக் காவல்துறையினர் நேற்று இரவுக் கைது செய்தனர்.

அவரது பிரிந்த மனைவிக்கு அனுப்பப்பட்ட வன்முறை வீடியோவில், இரண்டு வயது குழந்தை தீயின் வளையம் போன்ற ஒன்றின் உள்ளே நின்று கதறி அழுது கொண்டிருந்தது. அக்குழந்தை தீயிலிருந்து சுமார் 30 சென்டிமீட்டர் தொலைவில் இருந்தான்.

நேற்று மாலை  அந்த மனிதரின் பிரிந்த மனைவி புகார் அளித்ததைத் தொடர்ந்து கைது நடந்ததாகக் குவந்தான் மாவட்ட காவல் துறைத் தலைவர் வான் மொஹ்ட் ஜஹாரி வான் புசு கூறியதாகக் காஸ்மோ! தெரிவித்துள்ளது.

35 வயதான அவர் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் மாறனில் உள்ள எஸ்.எம்.கே. மாறன் 2 க்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கைது செய்யப்பட்டதாகவும், குழந்தையுடன் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

போலீஸ் அறிக்கையின்படி, அந்த நபர் தனக்கு எதிராக விவாகரத்து (தலாக்) கூறியதாகவும், செப்டம்பர் 15 அன்று தனது வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் புகார்தாரர் கூறினார்.

முஸ்லீம் ஆண்கள் விவாகரத்து பற்றி வாய்மொழியாக அறிவிக்கலாம், ஆனால் மலேசிய ஷரியா சட்டங்களின் கீழ், சியாரியா நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 5.25 மணியளவில் தனது மகனைப் பெசேராவில் உள்ள அவரது தந்தையின் வீட்டிற்குத் திருப்பி அனுப்பியதாகவும், அன்று இரவும் மறுநாளும் தனது முன்னாள் கணவரிடமிருந்து பல வீடியோக்களைப் பெற்றதாகவும் அந்தப் பெண் கூறியதாக, வான் ஜஹாரி கூறினார்.

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் சிறுவனின் வீடியோவைத் தவிர, அந்த நபர் பயந்துபோன சிறுவனைத் திட்டி அடிக்கும் வீடியோவும் தனக்கு கிடைத்ததாக அவர் கூறினார்.