இராகவன் கருப்பையா- இவ்வார இறுதியில் ஜொகூரின் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல் எதிர்பாராத வகையில் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
கூட்டணி அரசாங்கத்தைப் பிரதிநிதித்து அங்கு போட்டியிடும் அம்னோவைச் சேர்ந்த சைட் ஹுசேன் எளிதில் வெற்றி பெறுவார் என தொடக்கத்தில் கணிக்கப்பட்டது. ஏனெனில் அத்தொகுதி ஏற்கெனவே அம்னோவின் கைவசம் இருந்ததுதான்.
எனினும் வாக்களிப்பு தினம் நெருங்கிவிட்ட இவ்வேளையில் சைட் ஹுசேனின் நிலைமை தற்போது சற்று கடுமையாக உள்ளதைப் போல் தெரிகிறது.
இதற்கு மூலக் காரணம் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் அக்மால்தான் என்று எல்லாருக்கும் தெரியும்.
அண்மைய காலமாக அவர் வெளியிட்டு வரும் அராஜகமான கருத்துகள் தற்போது அம்னோவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிடும் போலான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
மக்கோத்தா தொகுதியில் 54% மலாய்க்கார வாக்காளர்களும் 35% சீனர்களும் 8 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் உள்ளனர்.
வெற்றி தோல்வியை சீன வாக்காளர்கள்தான் நீர்ணயம் செய்வார்கள் எனும் சூழல் நிலவுவதால் அக்மால் மீது உள்ள கோபத்தை இத்தேர்தலில் அவர்கள் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் கே.கே.மார்ட் எனும் கடைகளுக்கு எதிராக புறக்கணிப்பு நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு மிகவும் முரட்டுத்தனமாக அவர் நடத்து கொண்ட விதம் சீனர்கள் மட்டுமின்றி பெரும்பாலான மலேசியர்களுக்கு எரிச்சலூட்டியது.
ஏனெனில் புறக்கணிப்பை நிறுத்துமாறு பேரரசர் உத்தரவிட்ட போதிலும் அக்மால் அதனை செவி சாய்க்கவில்லை.
பிரதமர் அன்வாரும் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட்டும் கூட அவரைக் கண்டிக்காமல் இருந்தது நிறைய பேருக்கு ஏமாற்றமளித்தது.
அதன் பிறகு வாள் ஒன்றை ஏந்தி அச்சுறுத்தும் வகையில் படம் பிடித்து சமூத வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த போதிலும் அவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. செல்லப் பிள்ளையைப் போல்தான் அவர் நடத்தப்பட்டார்.
இந்த அராஜகச் செயல்கள் யாவும் ஓரளவு ஓய்ந்திருந்த வேளையில் சில வாரங்களுக்கு முன் ‘ஜாக்கிம்’ விவகாரத்தில் மீண்டும் தனது முரட்டுத்தனத்தை அவர் வெளிக்காட்டினார்.
அவ்விவகாரத்தில் ஜ.செ.க.வின் தேசிய உதவித் தலைவரான செபூத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கை கொஞ்சமும் மரியாதையில்லாமல் மிகவும் தரக்குறைவாக அவர் பேசியது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.
அன்வாரும் கூட திரேசாவைத்தான் குறை சொன்னாரே ஒழிய அக்மாலைக் கண்டிக்கவில்லை என்பது பலருக்கு ஏமாற்றம்தான்.
இந்த சம்பவங்கள் எல்லாம் சீனர்களின் கோபத்தைக் கிளரிவிட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. எனவே தங்களுடைய அதிருப்தியை இத்தேர்தலில் அவர்கள் காட்டுவார்கள் என்பதற்கான அறிகுறிகள் கூட்டணி அரசாங்கத்தை சற்று கலக்கமடையச் செய்துள்ளது.
“அக்மால் மீது நான் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதால் அவருடன் ஒரே மேடையில் நான் பேச மாட்டேன்” என திரேசா செய்த தீடீர் அறிவிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இதற்கிடையே 8% இந்திய வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர் சைட் ஹுசேனுக்கு வாக்களிப்பார்கள் என ம.இ.கா. செய்துள்ள அறிவிப்பெல்லாம் வெறும் பகல் கனவுதான். ஏனெனில் அவர்களும் கூட அம்னோக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய வாய்ப்புதான் அதிகமாக உள்ளது.
ஆக இம்முறை அக்மாலுக்கும் அம்னோவுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என மக்கோத்தாவின் சீன வாக்காளர்கள் ஒட்டு மொத்தமாக முடிவெடுத்தால் அது அன்வாருக்கும் பாதகமாகத்தான் அமையும் என்பதில் ஐயமில்லை.