ஜிஐஎஸ்பி சிறார் இல்லம்மும், அச்சம் தரும் அமைப்பு முறையும்

கி.சீலதாஸ் – மலேசியர்களை மட்டுமல்ல உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அதிர்ச்சி தந்து கொண்டிருக்கும் சிறார்கள் உட்படுத்தப்பட்ட பாலியல் செய்தியானது தொடர்ந்து அதிர்ச்சிகளைத் தந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது நமக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை எளிதில் முடிவுறும் என எதிர்பார்க்க முடியாது.

ஜிஐஎஸ்பி (GISB) நிறுவனம் நடத்தும் சிறார் பாதுகாப்பு இல்லங்களில் நடத்தப்பட்ட பாலியல் குற்றங்களைப் பற்றி சில விவரங்களைக் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவை நமக்கு அச்சத்தைத் தருகின்றன. அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்ற விவாதத்தில் இறங்கியுள்ளனர்.

ஜிஐஎஸ்பி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியும் எனில் நாட்டில் அமைதி நிலைத்திருக்குமா? பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு உண்டா? பெற்றோர்கள் கவலையின்றி வாழ முடியுமா என்ற வேதனை மிகுந்த கேள்வி நம்மை வருத்துவதோடு அதை நினைக்கும்போது அச்சம் நம்மைத் தடுமாறச் செய்வது உண்மையல்லவா?

ஒரு சிலரின் தகாத நடவடிக்கைகளால், அவை ஏன் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கேள்வி நம்மைத் துளைத்துக் கொண்டிருப்பதை யாராவது உணருகிறார்களா? சந்தேகம்தான்!

இந்த ஜிஐஎஸ்பி நிறுவனம் மலேசியாவில் மட்டும் தமது நடவடிகைகளை மேற்கொள்ளவில்லை. அது பல வெளிநாடுகளிலும் வணிகம் செய்கிறது, அவற்றின் நடவடிக்கைகள் இரகசியமாக இருந்தது மட்டுமல்ல மறைக்கப்பட்டிருந்ததாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடீன் ஹாரி தெரிவித்துள்ளார்.

அது ஒரு புறமிருக்க ஜிஐஎஸ்பி நிறுவனம் 1994ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கம். அது இஸ்லாத்துக்குப் புறம்பாகப் போதனைகளைப் பரப்புகிறது என்ற குற்றச்சாட்டு இப்பொழுதும் சொல்லப்படுகிறது.

இதுவும் மலேசியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. காரணம், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் போதனைகளை வேறு முறையைப் பயன்படுத்தி பரப்புவதற்கு வசதிகள் உண்டு எனின் நம் நாட்டின் பாதுகாப்பு எப்படிப்பட்டது என்று சிந்திக்கத் தூண்டும் அல்லவா?

அல் அக்ராமின் போதனைகளையும் அந்த இயக்கத்தையும் தடை செய்தது நடுவண் அரசு. எல்லா மாநில ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் மறு பிறவி பெற்று நாட்டில் வெளிப்படையாக இயங்கும் அளவுக்கு பலம் பெற்றிருந்தது என்பது தெளிவாகிறது. இந்தச் செய்தி மலேசியர்களைக் கவலைக்கு உட்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்காது.

இப்படிப்பட்ட சூழலில் மலேசியாவின் பாஸ் கட்சியின் நிலைபாடு என்ன? ஜிஐஎஸ்பி நிறுவனம் சிறப்பாக இயங்கும் வணிக நிறுவனம். அது மலேசியாவில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் தனது வணிகச் செல்வாக்கைச் சிறப்பாகப் பரவச் செய்துள்ளது.

எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் கவனம் தேவை என்கிறார் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியூடீன்.

தடை செய்யப்பட்ட அல் அக்ரம் இயக்கத்தின் இஸ்லாத்துக்கு மாறுபட்ட போதனைகளை நல்கும் இயக்கத்தின் மறுபிறவி பெற்றிருக்கும் ஜிஐஎஸ்பியை ஆதரித்து அதற்குப் பாதுகாப்பு நல்கும்படி கோருவதானது தடைசெய்யப்பட்ட போதனைகளைப் பாஸ் கட்சி ஆதரிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இந்தக் காலகட்டத்தின் ஜிஐஎஸ்பி நிறுவனத்தின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டவையா என்ற கேள்விக்கு விடை தேட வேண்டுமே அன்றி இன, சமய உணர்வுகளைக் குறிப்பாக, சமய உணர்வுகளைக் காரணம் காட்டி உண்மையான பிரச்சினையிலிருந்து விலகி போகக்கூடாது.

சுருக்கமாகச் சொன்னால் உண்மையைச் சந்திக்க துணிவு வேண்டும். உணர்ச்சிமிகு பிரச்சினை என்று கூறி போலியான அணுகுமுறைக்கு இடமளிப்பது பெரும் ஆபத்தாகும். இத்தகைய போக்கு நாட்டில் அமைதி நிலவ உதவாது.

சிறார் இல்லங்களில் நடந்த பாலியல் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிட்ட காவல்துறை, இந்தக் கெடுதியான நடவடிக்கையை ஊக்குவித்தது மட்டுமல்ல அதே தாக்குதலை பிறர் மீது நடத்துவதற்கான உற்சாகமும் காணப்பட்டதாம். இது மிகவும் ஆபத்தான செயல் அல்லவா?

நம்மைச் சங்கடத்துக்குள் சிக்க வைப்பது என்ன? இந்த மற்றவர்கள் யார்? யாரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் பயிற்சி நல்கப்படுகிறது? இந்தக் கேள்விக்கான விடையைக் காவல்துறை காண முற்பட வேண்டும். அது தவிர்க்கக் கூடாத பிரச்சினையாகும். ஏனெனில், பல்லின சமுதாயத்தில் ஒரு சாரார் மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் கவனம் செலுத்துகிறார்கள் எனின் அதை தீர விசாரிக்க வேண்டும்.

இதுவரை நமக்குத் தெரிவிக்கப்பட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும் போது இந்த ஜிஐஎஸ்பி பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் காண முற்படுவது நாட்டுக்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே, பாஸ் கட்சியின் பொது செயலாளரின் பரிந்துரையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. லாபகாரமான வியாபாரத்தைக் கெடுக்கக் கூடாது என்ற வாதத்தில் நியாயம் இருந்தாலும் அதனால் வரும் ஆபத்தைப் புறக்கணிப்பது விவேகமான நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

குழந்தைகளின் நலனில் கவனமுடையவர்கள் பொருளாதாரச் செழுமையில் மிகுந்த கவனம் செலுத்துவார்களேயானால் அது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

அதே சமயத்தில், சிறார்களை ஒரு வன்செயலுக்கு உட்படுத்தி அதே முறையைப் பிறர் மீது பயன்படுத்த ஊக்குவிப்பது மக்களிடையே பலவிதமான அச்சங்களை ஏற்படுத்தும்.

இங்கே மற்றுமொரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் நல்ல சட்டங்கள் உள்ளன. சிறார்களைப் பாதுகாக்கும் தரமான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை அமல்படுத்துவதில் வலிமையைக் காண்கிறோம்.

அப்படிப்பட்ட பலவீனத்தைத் துறந்து சட்டத்தை அமல்படுத்தும் திராணி கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தேவை. இந்தக் குறையை நீக்குவதையே அரசு ஒரு கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இப்பொழுது நாட்டைக் கேவலத்திற்கு உட்படுத்தியிருக்கும் பிரச்சினையை, மக்களைத் தலைகுனியச் செய்யும் கொடுமையை வெறும் இன, சமயக் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து மனித நேயத்துடன், மனித உணர்வோடு அணுக வேண்டும். அவ்வாறு செயல்பட தயங்காத சமய அமலாக்கத் துறை தேவை. அதை நடத்தும் திறமையான, துணிவான அதிகாரிகள் தேவை.

நாட்டில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்றால் அமலாக்கத் துறையின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது வெறும் அரசியல் கருத்தல்ல, மாறாக மனத்தில் உதிக்கும் வேதனை குரலாகும்.