கிள்ளானில் மீண்டும் இண்டர்லோக் தலைதூக்கியுள்ளது

இண்டர்லோக் நாவல் இவ்வாண்டிலிருந்து பாடநூல் திட்டத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆனால், அந்நூல் மீண்டும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கிள்ளானில் மூன்று பள்ளிகளின் மாணவர்களுக்கு இண்டர்லோக் நாவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தமக்கு புகார் வந்திருப்பதாக எல்.சேகரன் தகவல் அளித்தார்.

எஸ்எம்கே ராஜா மஹாடி, எஸ்எம்கே ஷா பண்டார் மற்றும் எஸ்எம்கே ஸ்ரீஅண்டளாஸ் ஆகிய மூன்று பள்ளிகளும் இண்டர்லோக் நாவலை மாணவர்களுக்கு வழங்கியவையாகும் என்று சிலாங்கூர் நடவடிக்கைக் குழு (Selangor Action Team) தலைவரான சேகரன் தெரிவித்தார்.

இத்தகவல் குறித்து கருத்து தெரிவித்த நியட் தலைவர் தஸ்லிம் இப்ராகிம் இது வருத்தத்திற்குரியதாகும் என்றார்.

கல்வி அமைச்சு இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட்டது என்று அறிவிப்பு செய்துள்ளது. இதில் தவறு நடந்துள்ளது என்று நம்புவோம். இருப்பினும், இது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று தஸ்லிம் மேலும் கூறினார்.

கிள்ளானிலுள்ள இம்மூன்று பள்ளி மாணவர்களுக்கும் இண்ட்லோக் நாவல் வழங்கப்பட்டது குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8, 2012) காலை மணி 10.00 க்கு கிள்ளான், ஜாலான் துங்கு கிளானா, இஸ்மைலி உணவகம், முதல் மாடியில் ஒரு செய்தியாளர் கூட்டம் நடைபெறும் என்று எல். சேகரன் கூறினார்.

சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பர் என்றாரவர்.