நாளைய தீர்ப்பில், நடப்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவருக்கு 20ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதை அவர் எப்படி எதிர்கொள்வார்?
“மனதளவில் சிறைவாழ்க்கைக்குத் தயராகிவிட்டேன்”, என்கிறார் அவர். வியாழக்கிழமை மலேசியாகினியுடனான நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“சிறைவாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அலசி ஆராய்ந்து புரிந்து வைத்திருக்கிறேன்.”
ஏற்கனவே சுங்கை பூலோ சிறைக்கூடத்தில் ஆறாண்டு இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. சிறைக்காவலர்களும் போலீசாரும் “பரிவுமிக்கவர்கள்” என்பது அவரின் கணிப்பு. அதனால் தம்மை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறார்.
ஆனால், குடும்பத்தார்தான் கவலைப்படுகிறார்கள்.1999-இல் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதைப் போன்று மீண்டும் நடக்கலாம் என்றவர்கள் அஞ்சுகிறார்கள்.
அப்படியெல்லாம் நடக்காது என்று ஒதுக்கித்தள்ளும் ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையான அன்வார், முன்பு போலீஸாரின் தாக்குதலின் விளைவாக வந்துசேர்ந்த முதுகுவலிதான் தொந்திரவாக இருக்கும் என்று நினைக்கிறார்.
அன்வாருடனான நேர்காணலின் சில பகுதிகளை இங்கு வழங்குகிறோம்:
திங்கள்கிழமை தீர்ப்பு. என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?
அன்வார் இப்ராகிம்: நம்புகிறேன். முந்தைய வழக்கைப் போல் அல்லாது அவர்கள் சான்றுகள் சமர்பிக்கவில்லை….தடயவியல் சான்றுகளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டார்கள்.அவற்றைச் சாமர்த்தியமாக பயன்படுத்த நினைத்தார்கள்.ஆனால், நாங்கள் (சான்றுகளை)தவிடுபொடியாக்கி விட்டோம். எனவே, உண்மைகளை ஒதுக்கிவிட முடியாது. அதனால்,என்னை விடுவிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
(ஆனால்) நமக்குத்தான் இங்கே எது, எப்படி நடக்குமென்பது தெரியுமே…. அதனால், நான் குற்றவாளிதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட மாட்டேன். நான் நேரடியாக சிறைக்கு அனுப்பப்படலாம், அல்லது குற்றவாளி என்று தீர்மானித்து பிணையில் விடுவிக்கப்படலாம். பிணையில் விடமுடியாது என்று மறுப்பதும் சிரமம்தான்.(முன்னாள் சிலாங்கூர் எம்பி முகம்மட்)கீர் தோயோவைப் பிணையில் விட்டார்கள், வேறு பல வழக்குகளில் அவ்வாறு நிகழ்ந்துள்ளது. ஆனால், உங்களுக்குத்தான் தெரியுமே, அன்வார் என்றால் எப்போதும் விதிவிலக்கு உண்டு என்பது.
முதல் குதப்புணர்ச்சி வழக்கில் அதுதானே நடந்தது…..
ஆமாம். இங்கு முக்கிமான விசயம் என்னவென்றால், அதற்கு நான் தயாராக இருக்கிறேனே, என் குடும்பத்தார் அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறார்களா என்பதுதான். இதைப் பற்றி அனைவரும் கூடி விவாதித்தோம்.அல்ஹம்டுலில்லா, அவர்கள் தயராகவே இருக்கிறார்கள்.
அதை ஏற்பது என் மனைவிக்கு (பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலுக்கு) சிரமமாகத்தான் இருக்கும். என் முதுகுவலியையும் வயதையும் எண்ணிக் கவலைப்படுகிறார்-ஆனால், நான் 46போலவே உணர்வதாகக் கூறுவேன். ஆனால் எனக்கு வயது 64 (சிரிக்கிறார்).
அவர்களின் கவலையெல்லாம் என் பாதுகாப்பைப் பற்றித்தான்.அதை எண்ணிக் கவலைப்பட வேண்டாம் என்றேன். அதற்கு அவர்கள், ‘1998-இலும் அப்படித்தான் சொன்னீர்கள்.ஆனாலும் அது நடந்தது.(மறுபடியும்)அப்படியெல்லாம் நடக்காது என்றார்கள் (அதிகாரிகள்). ஆனால், 2008-இல் அதுதான் திரும்பவும் நடந்தது.
அடிக்காத குறைதான்.மற்ற அனைத்தும், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல்கள்தான். என் முதுகு வலி பற்றியோ, வயதைப் பற்றியோ சிறிதும் அவர்கள் கவலைப்படவில்லை. ஆடைகளைக் கலையச் சொன்னார்களே அதை நான் குறிப்பிடவில்லை. சிமெண்ட் தரையில் படுக்க வைத்தார்கள். அதுதான் கொடுமை. அதைத் தொடர்ந்து தாங்க முடியாத வலி ஏற்பட்டது. ஊசிபோட்டுக்கொண்டேன்……எதுவானாலும் சமாளித்துக்கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன்.
அதற்கு மனத்தளவில் தயாராக இருக்கிறீர்கள்?
ஆமாம். சிறைவாழ்க்கையில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை அக்கு வேர் ஆணிவேராக அறிந்து வைத்திருக்கிறேன்.முன் அனுபவமும் இருக்கிறது. திரும்பவும் (தாக்குதல்) நடக்காது என்கிறார்கள். நடப்பது நடக்கட்டும்.
உங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? உங்கள் உடல்நிலை நன்றாக இல்லை என்பதுபோல் தெரிகிறதே?
முதுகுவலிதான். வேறு பிரச்னை இல்லை.அந்த வேதனை தாங்க முடியாது.அவர்கள் உதவவும் மாட்டார்கள்..தெரியுமா….டாக்டரைக் கேட்க வேண்டும் என்பார்கள், டாக்டர் நிபுணரைக் கேட்க வேண்டும் என்பார், நிபுணர் அமைச்சரைக் கேட்டுத்தான் முடிவெடுப்பார்…அதே (டாக்டர் எஸ்) ஜெயேந்திரனை அனுப்பினார்களென்றால் பிரச்னைதான்.
அந்த ஒரு டாக்டர்தான் என்னப் பார்க்கலாம் என்று (அப்போதைய பிரதமர் டாக்டர்) மகாதிர் அனுமதித்திருந்தார். எனக்கு நிமோனியா வந்துவிட்டது. வழக்கமாக எடுத்ததெற்கெல்லாம் மருத்துவ மனை போக வேண்டும் என்று கூறுபவன் அல்ல நான். ஆனால் அன்றிரவு என்னால் மூச்சு விட முடியவில்லை. மருத்துவ மனையை அழைத்தார்கள்.அவர்கள் அவருடன் (ஜெயேந்திரன்) தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
அவர், “இந்த மருந்தைக் கொடுங்கள்”, என்றார். எனக்கு ஆத்திரம் வந்தது. “எனக்கு மூச்சுவிட முடியவில்லை. நீங்களே வந்து பாருங்கள்”, என்றேன். “சரி, நாளைக் காலை வருகிறேன்”, என்றார். மறுநாள் காலைவரை காத்திருக்க வேண்டியதாயிற்று.அதுதான் ஒரு பிரச்னை…என்னால் தாக்குப்பிடிக்க முடியுமா என்று கேட்டீர்கள். முடியும். மறுபடியும் நிமோனியா வருமா? வராது என்றுதான் நினைக்கிறேன்.
ஆண்மைக்குக் குறைவில்லை, தெரியுமோ (சிரிக்கிறார்). சிறைக்காவலர்கள், ஏன் போலீஸ் அதிகாரிகள்கூட கொடியவர்கள் அல்லர். அவர்களுக்கு உத்தரவிடப்படுகிறது,அதுதான் பிரச்னை. புக்கிட் அமான் லாக்-அப் போலீஸ் அதிகாரிகள்கூட மிகவும் நல்லவர்கள்தான். அவர்களை யாரும் குறைசொல்லி நான் கேட்டதில்லை.
சிறையிலும் அப்படித்தான். அங்கிருந்த ஆறு ஆண்டுகளில் ஒரே ஒருவர்தான் அம்னோ-பெர்காசா போன்றவர். சில வேளைகளில் அவர்களாலும் பெரிதாக எதையும் செய்ய முடியாது.ஆனாலும், பரிவு காட்டுவார்கள். எனக்கு உடல்நிலை நன்றாக இல்லையென்றால் பெனடோல் கொடுப்பார்கள். முதுகில் தடவிக்கொள்ள தைலம் கொடுப்பார்கள்.
நீங்கள் திரும்பிவரும்போது பக்காத்தான் மேலும் வலிமை பெற்றிருக்கும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. நான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுவதுதான் நல்லது என்றுகூட ஒருவர் கிண்டலடித்துள்ளார், தெரியுமா. அசிசாவுக்குதான் அது பிடிக்கவில்லை.
என்னைச் சிறைக்கு அனுப்பும் முடிவுக்கு 1999-இல் இருந்ததுபோன்ற ஆதரவு இருக்காது. மலாய்க்காரர்களில் பலர் அன்வாரைச் சிறைக்கு அனுப்பத்தான் வேண்டுமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். அம்னோவில்கூட “எதற்காக அவரைச் சிறையில் போட வேண்டும்’’ , என்று கேட்போர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முந்தைய வழக்குபோன்றதல்ல இது. இதைப் பற்றி நாடு முழுக்க வாதங்களும் எதிர்வாதங்களும் நாடு முழுக்க நடைபெற்றுள்ளது. இப்போது தவளைகளையும் பெர்காசா போன்றோரையும் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.இதெல்லாம் மக்களுக்குப் பிடிக்கவில்லை.
ஆக, நீங்கள் சிறைக்கு அனுப்பப்பட்டால் அது, சீனர்களையும் இந்தியர்களையும்விட மலாய்க்காரரிடையே உங்களுக்குக் கூடுதல் அனுதாபத்தைப் பெற்றுத் தரும், என்கிறீர்கள்?
சீனர்களில் பெரும்பகுதியினர் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.சீனர்கள் இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டார்கள். எனவே, இப்போது போராட்டம் மலாய்க்காரர்களிடையேதான்.நான் சிறைக்கு அனுப்பப்பட்டால் அது எங்கள்தரப்புக்கு வலுச் சேர்க்கும், ஆதரவைப் பெருக்கும் என்பதே பக்காத்தான் தலைவர்களின் பொதுவான கருத்தாகும்.அம்னோவும் அப்படித்தான் நினைப்பதாக தெரிகிறது.அவர்களில் நான் சந்தித்த பலரும் இதைத்தான் குறிப்பிட்டார்கள்.
அப்படியானால், அவர்கள் இரண்டாவது விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்து உங்களை விடுவிப்பார்கள்?
பிணையில் விடுவிக்கலாம்.
மலாய்க்கார்கள் இருதரப்பினர் சொல்வதையும் கேட்பதாக சொல்கிறீர்கள். நீங்கள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அம்னோ செய்தது சரிதான் என்ற முடிவுக்கு அவர்கள் வருவார்களா?
1998,1999-இல் எல்லாம் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவே மலாய்க்கார்கள் நம்பினார்கள்.இப்போது தியோ பெங் ஹொக், பிகேஎப்ஜெட் போன்ற வழக்குகளைப் பார்த்த பின்னர் மக்களுக்குப் புரிந்துவிட்டது.மக்களை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
கிராமப்புற உள்பகுதிகளில், தகவல்கள் மக்களைச் சென்றடைய முடியாத பகுதிகளில் வேண்டுமானால் புரிதல் சற்றுக்குறைவாக இருக்கலாம்.சில அம்னோ தொகுதித் தலைவர்கள்கூட சொல்வதுண்டு:“Ya lah, Kita tak setuju sebab you baik dengan DAP.” (நீங்கள் டிஏபியுடன் நெருக்கமாக இருப்பது பிடிக்கவில்லை)
இப்படி சாதாரணமாக சொல்வதுண்டு. பினாங்கு பழைய அம்னோ சகாக்கள்கூட அப்படிச் சொல்வதுண்டு.. அதற்கு நான், “Tanah you yang mana Guan Eng ambil?”( உங்களுடைய எந்த நிலத்தை குவான் எங் எடுத்துக்கொண்டார்?) என்று திருப்பிக் கேட்பேன்.அதற்கு அவர்கள், “Tak ada lah tapi…” (இல்லை, ஆனால்….)என்று இழுப்பார்கள்.“You nak Ketua Menteri Melayu? Dulu pun tidak” (உங்களுக்கு மலாய்க்காரர் ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும், அப்படித்தானே. முன்பும்கூட அப்படி ஒருவர் இருந்ததில்லையே) என்பேன்.
முதலாவது குதப்புணர்ச்சி வழக்கு முழுவதும் நிறைய பேர் நீதிமன்ற வாசலில் உங்களைப் பார்க்கக் காத்திருப்பார்கள்.இப்போது அப்படி இல்லை. அது, உங்களுக்கான ஆதரவு குறைந்து வருவதைக் காட்டுகிறதா?
இரண்டுக்குமிடையில் வேறுபாடு உண்டு. அப்போது சிறையில் இருந்தேன். இப்போது நீதிமன்ற அலுவல் மாலை நான்கு மணிக்கு முடிந்ததும் ஆறு மணிக்கெல்லாம் ஈப்போவில் இருக்கிறேன். ஆங்காங்கே சென்று தலையைக் காண்பிக்கிறேன். மக்களும் பார்க்கிறார்கள். மலாக்காவில் இருக்கும்போது ஒருவர் சொன்னார்: “நாளை நீதிமன்றத்தில் உங்களைச் சந்திக்கிறேன்”, என்று.மறுநாள் நீதிமன்றம் வந்திருந்தார்.
கடந்த வாரம் சுங்கை பட்டாணி சென்றிருந்தேன். அங்கு என்னைச் சந்தித்த மக்கள் (தீர்ப்பை அறிய) வருவதாகச் சொன்னார்கள். திரெங்கானு, கிளந்தானிலிருந்தெல்லாம் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், விடாமல் போட்டுத் தாக்குகிறார்கள் அல்லவா, அதனால் (ஆதரவு) சற்றுக் குறைந்திருக்கலாம்.
நடக்கக்கூடாது நடந்து நீங்கள் சிறைக்கு அனுப்பப்படும் நிலை ஏற்படுமானால் நீங்கள் மலேசியர்களுக்கு என்ன சொல்ல விரும்புவீர்கள்?
பாடுபடுங்கள். ஊழலும் அநியாயமும் நிறைந்த நிர்வாகத்துக்கு எதிராகப் போராடுங்கள். ஆனால், உங்கள் ஆற்றல் எல்லாம் தேர்தலின்போது பயன்பட வேண்டும்.தேர்தல்தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.இதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி.