ராயல் மலேசியா காவல்துறையின் (PDRM) மொத்தம் 45 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஜனவரி முதல் செப்டம்பர் வரை MACC ஆல் கைது செய்யப்பட்டதாக அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
லஞ்சம் பெற்றமை மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அதே காலகட்டத்தில், 27 பேர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, 13 பேர் குற்றவாளிகள் என்று அவர் கூறினார்.
“குறித்த காலத்திற்கு, புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை (Standard Compliance Department) மொத்தம் 1,557 ஒழுங்கு விசாரணை ஆவணங்களையும், விதிகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக 1,118 ஒழுங்கு விசாரணை ஆவணங்களையும் திறந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமானில் நடைபெற்ற அணியின் ஒருமைப்பாடு தினத்துடன் இணைந்து PDRM ஊழல் எதிர்ப்பு அங்கீகார விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஊழலை நிராகரிப்பதில் அதிக நேர்மையை வெளிப்படுத்தியதற்காக 51 உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் PDRM மற்றும் MACC பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனர்.
பதவியைப் பொருட்படுத்தாமல், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எவருக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மட்டங்களிலும் உள்ள காவல்துறை குழுக்களின் தலைமைக்கு அயோப் கான் நினைவூட்டினார்.
“தலைவர்களான நாம், உயர் போலீஸ் அதிகாரிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கீழ்நிலை போலீஸ் அதிகாரிகள்மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்.
“முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதில் இரட்டை வேடம் போடக் கூடாது,” என்றார்.
அனைத்து மட்டங்களிலும் உள்ள தலைமை ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார், ஏனெனில் அவை எப்போதும் அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகளால் மட்டுமல்ல, தொடர்ந்து பொதுமக்களின் பார்வையிலும் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன.