ஹசான் அலி பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆணையர் ஹசான் அலி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பாஸ் கட்சியின் மத்திய குழு இன்று விடுத்த ஓர் அறிக்கையில் இம்முடிவைத் தெரிவித்தது.

“கட்சியின் நலன்களுக்கு ஹசானின் நடவடிக்கைகள் பாதகமாக இருந்ததோடு பிரச்னைகளையும் ஏற்படுத்தியதால் கட்சியின் விதிகளுக்கு ஏற்ப இம்முடிவு எடுக்கப்பட்டது”, என்று அறிக்கை கூறிற்று.

அவரது நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

கோலாலம்பூரில் கட்சி தலைமையகத்தில் நடந்த மத்தியக் குழு கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அந்த அறிக்கையைச் செய்தியாளர்கள் கூட்டத்தில் வாசித்தார்.

இம்முடிவு கட்சியில் கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது, ஏனென்றால் ஹசான் அலியின் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு குறிப்பிட்ட அளவிலான ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.

மந்திரி புசார் அலுவலகம்: ஹசான் பதவி விலகலாம்

ஹசான் தற்போது சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கிறார். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவர் ஆட்சிக்குழுவிலிருந்து அகற்றப்படுவது தவிர்க்க இயலாததாகியுள்ளது.

ஹசான் அலியின் இடத்தில் இன்னொருவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் அவரது இடத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர் எதிர்வரும் புதன்கிழமை அரண்மனைக்குத் தெரிவிக்கப்படுவார் என்று மந்திரி புசார் அலுவலகம் இன்று பின்னேரத்தில் உறுதிப்படுத்தியது.