முன்னாள் அம்னோ பேராளரும் வலைப்பதிவாளரும் டிஏபி-யில் இணைந்தனர்

அம்னோ உறுப்பினர்களான இரண்டு பிரபலமான வலைப்பதிவாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக டிஏபி-யில் இணைந்தனர். அதனால் அவர்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

புலாவ் மானிஸ் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரீப் சாப்ரி அப்துல் அஜிஸ், நெகிரி செம்பிலானில் மூத்த அம்னோ உறுப்பினர் அஸ்பான் அலியாஸ் ஆகியோரே அந்த இருவரும் ஆவர்.

தாங்கள் முன் நிபந்தனையுமின்றி டிஏபி-யில் இணைந்துள்ளதாகவும் தங்களுக்குப் பதவிகள் ஏதும் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

அதிகாரப்பூர்வமாக அவர்கள் அம்னோவிலிருந்து விலகி விட்டார்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த முகமட் அரீப், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிடம் விண்ணப்பப் பாரத்தை தாமும் அஸ்பானும் வழங்கியதின் மூலம் தங்களது அம்னோ உறுப்பியம் இயல்பாகவே முடிவுக்கு வந்து விட்டதாக சொன்னார்.

டிஏபி மலாய் எதிர்ப்புக் கட்சி என அம்னோ தொடர்ந்து குறை கூறி வரும் வேளையில் அவர்கள் இருவரும் அந்தக் கட்சியில் சேர்ந்திருப்பது அதற்கு பெரிய வெற்றி என வருணிக்கப்பட்டது.

முகமட் அரீப், Sakmongkol46 என்னும் புனை பெயரில் தமது வலைப்பதிவுகளை இன்னும் எழுதி வருகிறார்.

அவர் ஒரு சமயத்தில் அம்னோ தலைவர் தலைமை தாங்கும் பெக்கான் அம்னோ தொகுதியில் தகவல் பிரிவுத் தலைவராக இருந்துள்ளார்.

மலாய் போராட்டம் டிஏபி-யில் தொடர முடியும்

டிஏபி-யில் தாம் இணைந்தது உள்ளார்ந்தது என்றும் அவர் சொன்னார். காரணம் அந்தக் கட்சியின் கொள்கைகள் தமது  அரசியல் போராட்டத்துடன் இணங்கிப் போவதாக அவர் கருதுகிறார்.

“நான் டிஏபி-யில் மலாய் போராட்டத்தை தொடருவதில் எந்தச் சிரமமும் இல்லை. மன்னராட்சி, இஸ்லாம், மலாய் மொழி, மலாய்க்காரர்களின் நிலை ஆகியவற்றை டிஏபி ஏற்றுக் கொள்கிறது.”

தனக்கு ஆதரவு அளிக்கின்ற மலாய்க்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்வது  மலாய்க்காரர்களுக்கு உதவும் அம்னோ மாதிரி என அப்துல் அஜிஸ் சொன்னார்.

இதனிடையே கடந்த 40 ஆண்டுகளாக அம்னோ உறுப்பினராக இருந்து வந்துள்ள அஸ்பான், அந்தக் கட்சி தொடக்க காலத்தில் இருந்ததைப் போன்று இப்போது இல்லை என கூறினார்.

“அம்னோவிலும் அரசாங்கத்திலும் ஊழல் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெருகி விட்டதே நான் அம்னோவிலிருந்து விலகி டிஏபி-யில் நான் சேர்ந்ததற்கு முக்கியக் காரணம்.”

“நாங்கள் பொறுமையாக இருந்தோம். அம்னோ தொடர்ந்து ஆட்சி புரிய வேண்டுமானால் அது சரி செய்யப்பட வேண்டும். ஆனால் அதனால் அதனைச் செய்ய முடியவில்லை.”