MIC இன் செனட்டர் ஒருவர், தனியார் மருத்துவ வசதிகளில் சிகிச்சைக் கட்டணங்களை உறுதியாகக் கட்டுப்படுத்தவும் காப்பீட்டு நிறுவனங்களைக் கண்காணிக்கவும் சுகாதார அமைச்சகம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவிற்கு (Bank Negara Malaysia) அழைப்பு விடுத்துள்ளார்.
செப்டம்பரில் MIC இல் மீண்டும் இணைந்த சி சிவராஜ், மருத்துவச் செலவுகள் பொதுமக்களுக்கு, குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்குச் சுமையாகத் தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய, இத்தகைய நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என்று வலியுறுத்தினார்.
Mercer Marsh Benefits 2023 அறிக்கையை மேற்கோள் காட்டி, மலேசியாவின் மருத்துவ பணவீக்க விகிதம் ஆண்டுதோறும் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடந்த ஆண்டுப் பதிவு செய்யப்பட்ட தேசிய சராசரி பணவீக்க விகிதமான 3.3 சதவீதத்தை விட அதிகமாகும்.
“மருத்துவச் சிகிச்சைக்கான விலை உயர்ந்து வருவது மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், அது தனிநபர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் சுகாதார அமைப்பின் எதிர்காலத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்”.
“மருந்துகளின் விலை உயர்வு, நவீன தொழில்நுட்பம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான அதிக தேவை ஆகியவை முக்கிய பங்களிப்பாகும். இதனால், சுகாதார காப்பீட்டு பிரீமியமும் உயர்ந்துள்ளது,” என நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரீமியங்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகச் சிவராஜா சுட்டிக்காட்டினார்.
“M40 மற்றும் B40 வருமானக் குழுக்களில் உள்ள பலர் இனி இந்தப் பிரீமியங்களைச் செலுத்த முடியாது”.
“இதன் அர்த்தம் என்ன? போதிய மருத்துவக் காப்பீடு இல்லாமல் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அர்த்தம்,” என்று அவர் மேலும் கூறினார்.
விலை கட்டுப்பாடு தேவை
தனியார் மருத்துவமனைகள் அதிக மருத்துவக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சிவராஜ் வலியுறுத்தினார்.
“MediShield Life போன்ற தேசிய திட்டங்கள்மூலம் சிகிச்சை செலவுகளை ஒழுங்குபடுத்தும் சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்,” என்று அவர் பரிந்துரைத்தார்.
ஜெர்மனி மற்றும் ஹாலந்தில் நடைமுறையில் உள்ள M40 மற்றும் B40 குழுக்களைக் குறிவைத்து, குறைந்த பிரீமியத்துடன் அடிப்படை திட்டங்களை வழங்கக் காப்பீட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கவும் அவர் முன்மொழிந்தார்.
“சுகாதாரம் என்பது ஒரு பொருள் அல்ல. இது ஒரு அடிப்படை மனித உரிமை. ஒரு வளைந்த அமைப்பின் கீழ் மக்கள் தொடர்ந்து துன்பப்படுவதை அனுமதிக்க முடியாது”.
“அரசு செயல்பட வேண்டும். நாம் செயல்பட வேண்டும். இல்லையெனில், விரைவில் நமது சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையும், அல்லது மேலும் அதன் சுமைகளை மக்கள் தாங்குவார்கள். தாமதமாகும் வரை காத்திருக்க வேண்டாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
அதிகரித்து வரும் காப்பீட்டு பிரீமியங்கள்
இன்சூரன்ஸ் பிரீமியம் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயரலாம் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 28 அன்று, BNM காப்பீட்டாளர்கள் மற்றும் தக்காஃபுல் ஆபரேட்டர்கள் தங்கள் மறு விலையிடல் உத்திகளை மிகவும் நியாயமான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
பாலிசி உரிமையாளர்கள் அல்லது பங்குதாரர்கள்மீதான தாக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் காலப்போக்கில் பிரீமியங்கள் அல்லது பங்களிப்புகளின் அதிகரிப்பை நிர்வகிப்பது இதில் அடங்கும் என்று மத்திய வங்கி கூறியது.
இருப்பினும், டிசம்பர் 3 அன்று, மலேசியாவின் ஆயுள் காப்பீட்டு சங்கத்தின் (Life Insurance Association of Malaysia) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஓ’டெல், அடுத்த ஆண்டுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களின் அதிகரிப்பு அமலில் இருக்கும் என்று அறிவித்தார்.
விலை மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன, ஆனால் எதிர்காலத்தில் மட்டுமே என்று அவர் கூறினார்.