நேற்று நிலவரப்படி, கிளந்தான், திரங்கானு, கெடா, நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் 10,272 பேர் நீர்வழி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது.
6,730 கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள், 3,021 தோல் நோய்த்தொற்றுகள், 298 கடுமையான இரைப்பை குடல் அழற்சி, 190 வெண்படல அழற்சி, 20 சின்னம்மை மற்றும் 13 கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) எனச் சுகாதார அமைச்சர் சுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
தங்குமிடங்களில் பதிவான அனைத்து தொற்று நோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
“பொதுமக்கள் அதிகாரிகளின் உத்தரவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் தொற்று நோய்கள், விபத்துக்கள் மற்றும் காயங்கள் பரவாமல் தடுக்க தனிப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”.
இன்று தும்பட்டில் உள்ள மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் தங்குமிடத்திற்குச் சென்றபின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, ”தனிநபர்கள் பிபிஎஸ் அல்லது அருகில் உள்ள சுகாதார வசதிகளில் உள்ள மருத்துவக் குழுக்களிடமிருந்து உடனடியாகச் சிகிச்சை பெறவும், சிகிச்சை தாமதத்தைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
கிளந்தானில் 77, திரங்கானுவில் 30, கெடாவில் ஒன்பது, நெகிரி செம்பிலான் மற்றும் பகாங்கில் தலா இரண்டு, பேராக்கில் ஒன்று என 121 சுகாதார வசதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்துள்ளார்.
அவை 56 கிராமப்புற கிளினிக்குகள், 34 சுகாதார கிளினிக்குகள், 19 பல் மருத்துவ மனைகள், ஐந்து மாவட்ட சுகாதார அலுவலகங்கள், ஆறு மருத்துவமனைகள் மற்றும் ஒரு சர்வதேச நுழைவுப் புள்ளியில் உள்ளன என்று அவர் விளக்கினார்.
“எண்பத்தேழு சுகாதார வசதிகள் செயல்படுகின்றன, அதே நேரத்தில் 31 தங்கள் சேவைகளை மாற்று வசதிகளுக்கு மாற்றியுள்ளன”.
“மூன்று வசதிகள் மட்டும் இன்னும் சுத்தம் செய்யப்படுவதால் செயல்படவில்லை. பொதுமக்கள் வழக்கம்போல் மாற்று வசதிகள் உட்பட இந்த வசதிகளில் சுகாதார சேவைகளைப் பெறலாம்,” என்றார்.
“தடையின்றி மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு பொருத்தமான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருப்பதை அமைச்சகம் உறுதி செய்யும்,” என்று அவர் கூறினார்.