இராகவன் கருப்பையா – மலேசிய நீதித்துறையை பொருத்தவரையில் அதிக அளவிலான அதிர்ச்சி தரும் முடிவுகளை அனேகமாக இவ்வாண்டில்தான் நாம் பார்த்திருக்கிறோம்.
வெளிநாட்டு விசா தொடர்பான ஊழல் வழக்கிலிருந்து துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் விடுவிக்கப்பட்டது மற்றும் 17 வெவ்வேறு குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதமர் நஜிபின் மனைவி ரோஸ்மா விடுதலை செய்யப்பட்டது, ஆகியவையும் அவற்றுள் அடங்கும்.
நீண்ட நாள்களாக நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்குகள் தீடீரென இத்தகையத் தீர்ப்புக்கு உள்ளாகியிருப்பதற்கு அரசியல் பின்னணி ஒரு காரணமாக இருக்குமோ என்று கூட சிலர் சந்தேகிக்கின்றனர்.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நஜிபின் வீட்டுக் காவல் கோரிக்கை தொடர்பான பிற்சேர்க்கைதான் இவ்வாண்டின் ஆகப் பெரிய சட்டத்துறை மர்மமாக உள்ளது.
அரச மன்னிப்புக்காக விண்ணப்பம் செய்திருந்த நஜிபின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி மன்னிப்பு வாரியம் கூடியது நாம் அறிந்த ஒன்றுதான்.
அதனைத் தொடர்ந்து நஜிபின் சிறைத் தண்டனை 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாவும், அபராதம் 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டது எல்லாருக்கும் தெரியும்.
அதே வேளையில் அவருக்கு வீட்டுக்காவல் வழங்குவதற்கான ஒரு பிற்சேர்க்கையும் அந்த முடிவில் உள்ளதா இல்லையா என்பதுதான் தற்போதைய மிகப் பெரிய மர்மமாகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் பேரரசராக இருந்த தற்போதைய பஹாங் சுல்தான் தலைமையில் கூடிய மன்னிப்பு வாரியத்தில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஸலேஹா மற்றும் சட்டத்துறை தலைவர் அஹ்மட் தெரிருடின் உள்பட மொத்தம் அறுவர் அங்கம் வகித்தனர் என்று நம்பப்படுகிறது.
அந்தக் கூட்டத்தில் பேரரசர் செய்யும் முடிவுதான் இறுதியானதாக இருக்கும். அம்முடிவுக்கு எதிராக ‘அப்பீலே கிடையாது’ என்பது எல்லாத் தரப்பினரும் அறிந்த ஒன்றுதான்.
இருப்பினும் மன்னிப்பு வாரியம் எடுத்த முடிவில் தனக்கு வீட்டுக் காவல் வழங்குவதற்கான பிற்சேர்க்கை இருந்ததாகவும் அது குறித்து அவ்வாரியம் அறிவிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றத்தில் நஜிப் வழக்குத் தொடுத்தார்.
அந்த பிற்சேர்க்கை இருப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் அன்வார், அஹ்மட் ஸாஹிட் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அஸாலினா, ஆகிய மூவருக்கும் நஜிபின் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினார்கள். ஆனால் அம்மூவருமே ஏன் அதற்கு பதிலுரைக்கவில்லை என்று தெரியவில்லை. அது பற்றி தனக்கும் கூட ஒன்றும் தெரியாது என உள்துறை அமைச்சர் சைஃபுடினும் கை விரித்தார்.
எனினும் அப்படி ஒரு பிற்சேர்க்கை இருக்கிறது என அனைத்துலக வர்த்தகத் துறையமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தங்களிடம் கூறியதாக பஹாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டியும் அஹ்மட் ஸாஹிட்டும் நஜிபுக்கு ஆதரவாக பத்திரப் பதிவு செய்தனர்.
ஆனால் அதற்கெல்லாம் ஆதாரம் இல்லை எனவும் அது வெறும் வதந்திதான் என்றும் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்பை வழங்கி வழக்கை தள்ளுபடி செய்தது.
இருந்த போதிலும் இந்த பிற்சேர்க்கை தொடர்பான மர்மம் கலைந்தபாடில்லை. அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக நஜிபின் புதல்வர் நிஸார் இம்மாதத் தொடக்கத்தில் ஒரு திடீர் அறிவிப்பை செய்தார்.
இத்தகைய சூழலில் இதனை ஒரு பெரிய அரசியல் நாடகமாகத்தான் வெகுசன மக்கள் பார்க்கின்றனர். அப்படி ஒரு பிற்சேர்க்கை இருக்கிறதா இல்லையா எனும் உண்மையை வெளிப்படையாக சொல்வதில் ஏன் இந்தத் தயக்கம்? என்பதே பொது மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை என பஹாங் அரச அலுவலகம் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அறிவித்துவிட்டது.
நஜிப் மேல் முறையீடு செய்துள்ளதால் தானும் இது குறித்து கருத்துரைக்கப் போவதில்லை என அன்வார் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
மேல் முறையீட்டு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மன்னிப்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் அது மன்னிப்பு வாரியம் வழியாகத்தான் இருக்க வேண்டுமேத் தவிர மற்ற வழிகளில் அல்ல என பேரரசர் கட்டளையிட்டுள்ளதாகஆகக் கடைசியாக சட்டத்துறை அலுவலகம் இரு தினங்களுக்கு முன் அறிவித்தது.
இப்படிப்பட்ட சூழலில் இந்த பிற்சேர்க்கை தொடர்பான மர்மம் நீதியை சூரையாடாமல் இருக்க வேண்டும்.