பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ், இந்த ஆண்டு ஹோட்டல் தங்கும் கட்டணத்தை 50 சதவிகிதம் வரை அதிகரிக்க தனது மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டதை மறுத்தார்.
அத்தகைய முன்மொழிவுகளோ கலந்துரையாடல்களோ தனது நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
“மாநிலத்தில் ஹோட்டல் தங்கும் கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருவாய், விளம்பர நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும், சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பை பராமரிக்கவும் போதுமானதாக இல்லை”.
ஜார்ஜ் டவுனில் இன்று போஸ் ஷாப் டத்தோ கெராமட்டைத் திறந்து வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இருப்பினும், மாநில அரசு ஹோட்டல் கட்டணத்தை உயர்த்த விரும்பவில்லை, இந்த விஷயத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை”.
சமீபத்தில், உள்ளூர் ஊடகங்கள் பினாங்கு ஹோட்டல் தங்குமிடக் கட்டணங்களை, பினாங்கு தீவு நகர சபையால் (MBPP) விதிக்கப்படும் உள்ளூர் வரியின் ஒரு வடிவத்தைக் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தது.
மேலும் கருத்து தெரிவிக்கையில், பல சுற்றுலா தளங்களைப் பழுதுபார்ப்பது மற்றும் பார்வையாளர்களுக்கான புதிய உள்கட்டமைப்புகளை நிர்மாணிப்பது ஆகியவை பெரும்பாலும் ஹோட்டல் கட்டணத்தைவிட மாநில அரசின் வருவாயால் நிதியளிக்கப்படுகிறது என்று சோவ் குறிப்பிட்டார்.
“உதாரணமாக, ஃபோர்ட் கார்ன்வாலிஸ் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ரிம 15 மில்லியன் முதல் ரிம 20 மில்லியன்வரை ஒதுக்கீடு தேவைப்படுகிறது, அதே சமயம் கர்னி பே மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம 220 மில்லியன் செலவாகும்”.
“இந்தச் செலவுகள் அனைத்தும் மாநில அரசால் ஏற்கப்படுகின்றன, ஏனெனில் ஹோட்டல் கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருவாய் ஒப்பீட்டளவில் சிறியது,” என்று அவர் விளக்கினார்.
மே 2024 இல் பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தின்போது, 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏப்ரல் 2024 வரை ஹோட்டல் கட்டணத்திலிருந்து ரிம 72 மில்லியன் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.