நமக்கு இன அடிப்படை பிரதிநிதித்துவம் பயனளிக்காது!

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் நம் சமூகத்தை பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு இந்திய அமைச்சர் இனிமேலும் நமக்குத் தேவைதானா என்பதை மீளாய்வு செய்வதற்கான காலம் இப்போது கனிந்துவிட்டது. அப்படித் தேவையென்றால் அதனால் என்ன நன்மை என்பதுதான் வெகுசன மக்களின் மனங்களில் உள்ள மிகப்பெரிய கேள்விக் குறியாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டு வரையில், ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேல் நம்மை பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொண்டு ம.இ.கா. மட்டுமே ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தது. எனினும் அக்கட்சி ஆத்மார்த்தமாக நம் சமூகத்தைப் பிரதிநிதித்ததா என்பது அகநிலைக்குரிய ஒரு விஷயம்.

இருப்பினும் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து ம.இ.கா.வும் சுவடு தெரியாமல் சுருங்கிப்போனது எல்லாருக்கும் தெரியும்.

அதன் பிறகு எந்த ஒரு இந்திய கட்சியும் ஆளும் கூட்டணியில் இல்லாத பட்சத்தில், “இனிமேல் நாங்கள்தான் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி,” என்று பறைசாற்றிக் கொள்ளும் நிலை யாருக்குமே இல்லாமல் போய்விட்டது.

அச்சமயத்தில் 2ஆவது தடவையாக பிரதமர் பொறுப்பை ஏற்ற மகாதீர், 3 கட்சிகளைச் சேர்ந்த 4 இந்தியர்களை அமைச்சர்களாக நியமித்து வரலாறு படைத்தார். குலசேகரன், சேவியர், கோபிந் சிங் மற்றும் வேதமூர்த்தி, ஆகியோரே அந்த 4 பேருமாவர்.

ஆனால் அந்நால்வரும் தங்களுடைய சுய நிலைகளையும், தத்தம் தொகுதிகளையும், அமைச்சுகளையும் மட்டுமே கவனித்துக் கொண்டார்களே ஒழிய சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய தலைமைத்துவ நிர்பந்தமோ உரிமை கோரலோ யாரிடமும் காணப்படவில்லை என்பதை நம் சமூகம் அப்போதே உணர்ந்தது.

பிறகு 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா. இடம் பெற்றுள்ள போதிலும் ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்டு அக்கட்சி ஒரு ஓரமாகத்தான் ஒதுங்கி நிற்கிறது.

ஜ.செ.க.வின் சிவகுமாரை ஒரே இந்திய அமைச்சராக நியமனம் செய்த பிரதமர் அன்வார், சுமார் ஒரு ஆண்டுக்குப் பிறகு செய்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்குப் பதிலாக கோபிந் சிங்கை நியமித்தார்.

இவ்விருவரையும் கூட, நம் சமூகத்தின் பிரதிநிதிகளாக எத்தனை பேர் ஏற்றுக் கொண்டார்கள் என்பது மற்றொரு கேள்விக்குறி.

நமது கலை, கலாச்சார, இலக்கிய, கோயில் நிகழ்ச்சிகளுக்கு, ஏற்பாட்டாளர்கள்தான் வலுக்கட்டாயமாக இவர்களை இழுத்துக் கொண்டு வந்து ‘சமுதாயத் தலைவர்’ எனும் அந்தஸ்தை வழங்குகிறார்களேத் தவிர ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் சுயமாக இவர்கள் என்ன செய்தார்கள் என்று திரும்பிப் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

ஆக, கடந்து வந்த இந்த ஆறரை ஆண்டுகளையும் சற்று திரும்பிப் பார்த்தால் நம் சமுதாயம் கிட்டதட்ட ஒரு தலைமைத்துவமோ பிரதிநிதித்துவமோ இல்லாமல்தான் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திடமிருந்து நமது உரிமைகளைப் பெறுவதற்கு இவர்களைப் போன்ற இடைத்தரகர்கள் நமக்குத் தேவையில்லை. இவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த அனுகூலங்களை அரசாங்கம் நமக்கு வழங்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அமைச்சுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி தேவையான அனுகூலங்களை சுயமாகவே நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். நமது தேவைகளை பூர்த்தி செய்வது இவர்களுடைய கடப்பாடு.

அரசியல்வாதிகளிடம் தலைகுனிந்து, கையேந்தும் சமுதாயமாக இனிமேலும் நாம் இருக்கக் கூடாது. உரிமைகளை தட்டிக் கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சீன சமூகத்தினர் அவர்களுடைய அரசியல் தலைவர்களை நம்பியா இருக்கிறார்கள்? கடுமையான உழைப்பைதான் நம்புகின்றனர். அதில்தான் கவனம் செலுத்துகின்றனர். வேண்டியதை சுயமாகத்தான் பெற்றுக் கொள்கின்றனர்.

அரசியல்வாதிகளை கண்மூடித்தனமாக அவர்கள் பின்பற்றுவதில்லை. கடந்த வாரம் முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்பான நீதிமன்ற வழக்கின் போது கூட சீன சமூகத்தைச் சார்ந்த யாரும் உயர் கல்விக் கூடங்களிலிருந்தோ அலுவலகங்களிலிருந்தோ விடுப்பு எடுத்துக் கொண்டு கோயில்களில் நஜிப்புக்காக பிரார்த்தனை செய்ததாகத் தெரியவில்லை. அவரவர் வேலைகளைத்தான் கவனித்தனர்.

எனவே, நமக்கு 2 அமைச்சர்கள் வேண்டும், தமிழ் பேசும் அமைச்சர் வேண்டும், போன்ற காலங்கடந்த, கோரிக்கைகள் மீது நேரத்தை விரயமாக்காமல், நாம் ஒவ்வொருவரும், சுயமான, ஆக்ககரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அரசியல் விழிப்புணர்வோடு உரிமைகளை நடைமுறையாக்கும் பாதையில் பயணிக்க வேண்டும்.