கோயில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் நாளைப் பத்துமலைக்கு வருகை புரிகிறார்  

பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாளை மதியம் பத்து மலைக்கு வருவார் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் (SMMTD KL) தெரிவித்துள்ளது.

மலேசியாகினியுடன் பகிர்ந்து கொண்ட SMMTD KL தலைவர் ஆர். நடராஜாவின் வாட்ஸ்அப் செய்தியின்படி, பிரதமர் ஜனவரி 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குத் தைப்பூச கொண்டாட்டம் நடைபெறும் புகழ்பெற்ற இந்துக் கோவிலுக்கு வருகை புரிய திட்டமிடப்பட்டுள்ளது.

“SMMTD KL இன் நிர்வாகக் குழுவின் அன்புள்ள உறுப்பினர்களே, நண்பர்களே, பக்தர்களே. வணக்கம்.

“எங்கள் அன்பிற்குரிய மாண்புமிகு பிரதமர், கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, நாளைப் பிற்பகல் 3.00 மணிக்குப் பத்து மலைக்கு வருவார்”.

“நுழைவாயிலில் அவருக்கு மாலை அணிவிக்கப்படும். அவரது மறக்கமுடியாத வருகை நமது இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும். தயவுசெய்து தவறாமல் கலந்து கொள்ளுங்கள். நன்றி,” என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.

2023 ஆம் ஆண்டில், கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அன்வார், உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததால் ரத்து செய்ய வேண்டியிருந்தது.

முஸ்லிம்கள் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்த கடுமையான விவாதத்திற்கு மத்தியில் அன்வாரின் நாளைய வருகை வந்துள்ளது.

இந்த விவகாரம்குறித்து நாளை அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.