சில ஐரோப்பிய நாடுகளில் தெரிவிக்கப்பட்டபடி, அதிக அளவு குளோரேட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் கார்பனேற்றப்பட்ட பானப் பொருட்களால் மலேசியா பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் சுல்கேப்ளி அகமது கூறினார்.
சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் திட்டத்தின் கருத்துகளின் அடிப்படையில், மலேசியாவில் இந்தப் பொருள் இதுவரை பாதிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் கூறினார்.
பெல்ஜியம், லக்சம்பர்க், யுனைடெட் கிங்டம் மற்றும் நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் விநியோகிக்கப்பட்ட கோகோ கோலா ஐரோப்பா பசிபிக் பார்ட்னர்ஸின் தயாரிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டதாகச் சுல்கேப்ளி தெளிவுபடுத்தினார்.
“இது ஒரு உலகளாவிய நிகழ்வு அல்ல; இது ஒரு குறிப்பிட்ட தொகுதி அல்லது ஒரு குறிப்பிட்ட சரக்கின் விநியோகச் சங்கிலியுடன் தொடர்புடையதாக இருக்கலாம்”.
“நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம், ஆனால் இன்று வரை, பாதிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை”.
“மலேசியாவிலும் ஆசிய பிராந்தியத்திலும் தயாரிப்புக்குச் சிவப்புச் சின்னம் இல்லை,” என்று அவர் இன்று சுங்கை துவா சுகாதார மருத்துவமனையில் செபராங் பிறை உத்தாரா ஆரோக்கிய மையத் திறப்பு(Seberang Perai Utara Wellness Hub) தினத்தை நியமித்தபின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, அதிக குளோரேட் அளவுகள் காரணமாக ஐரோப்பாவில் கோகோ கோலா தயாரிப்புகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவில் கோகோ கோலா தயாரிப்புகளைச் சோதனை செய்து விற்பனையை நிறுத்தி வைக்குமாறு பினாங்கு நுகர்வோர் சங்கம் (CAP) அமைச்சகத்தை வலியுறுத்தியது.
CAP இன் படி, கோகோ கோலா மலேசியா தற்போது 80க்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரித்து, சந்தைப்படுத்தி, விநியோகித்து வருகிறது.