திடீர் பொதுத் தேர்தலுக்குத் தயாராவது மன்னரின் விருப்பத்திற்கு எதிரானது அல்ல

இந்த ஆண்டு ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்குத் தயாராகும்  பெர்சத்து கட்சியின் முடிவு  யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கு எதிராகச் செயல்பட்டதாக  கருத கூடாது  என்கிறார் பெர்சத்து கட்சி தலைவர்.

ஜனநாயகத்திற்கு உறுதியளித்த ஒவ்வொரு அரசியல் கட்சியும் எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வது அதன் பொறுப்பு என்று செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் இஸ்ஹார் ஷா அரிப் ஷா கூறினார்.

“பெர்சத்து மன்னரின் விருப்பங்களை அவமதித்ததாகக் குற்றம் சாட்டும் எம்.பி.க்களின் கூற்றுகள், மதனி அரசாங்கத்தின் தோல்விகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு மலிவான முயற்சியாகும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தவறியதாகவும் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் அவர் குற்றம் சாடின்னார். அன்வார் இப்ராஹிம் நிர்வாகத்தின் மீது மலேசியர்கள் பொதுவாக நம்பிக்கையை இழந்து வருவதாகவும், “எனவே, முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கான சாத்தியக்கூறு என்பது நிராகரிக்க முடியாத ஒரு உண்மை,” என்று பெர்சத்து இளைஞர்களின் தேர்தல் பணியகத்தின் தலைவரான இஸ்ஹார் கூறினார்.

வெள்ளிக்கிழமை, கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி, பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்குத் தயாராக, கட்சியின் உறுப்பினர்களை உடனடியாக அணிதிரட்ட உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

பெர்சத்து மற்றும் பாஸ் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து “மிகவும் ஊக்கமளிக்கும் முன்னேற்றங்கள்” குறித்து விவாதிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை பெர்சத்து கூட்டத்தின் போது முகிதீன் இந்த உத்தரவை வெளியிட்டதாக அஸ்மின் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஆண்டு மக்களவை கூட்டத்தைத் தொடங்கும்போது அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்கு எதிராக யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் எம்.பி.க்களை எச்சரித்ததாக அரசாங்க பின்வரிசை உறுப்பினர்கள் பெர்சத்துவுக்கு நினைவூட்டினர்.

பெர்சத்துவின் முன்கூட்டிய தேர்தல் குறித்த பேச்சு மாமன்னரின் விருப்பத்திற்கு எதிரானது என்றும், அது “ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக” செயல்படவில்லை என்றும் ஜெலுடோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் கூறினார்.

 

 

-fmt