டிஏபி தேசியத் தலைவர் லிம் குவான் எங், அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றவும், பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கடுமையான விதிகளை மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
“சோஸ்மாவின் அடக்குமுறை மற்றும் கொடூரமான விதிகளை நீக்க இந்த ஆண்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்”.
“இது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியுடன் இணைந்த நிறுவன சீர்திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகும்,” என்று பாகன் எம்.பி. இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிப்ரவரி 8 ஆம் தேதி, சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 ஆண்களின் குடும்பத்தினர் சுங்கை பூலோ சிறைச்சாலை வளாகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியதாகக் கூறப்படும் கைதிகளைப் பார்வையிடவும், அவர்களைப் பார்க்கவும் அனுமதிக்குமாறு அவர்கள் அரசாங்கத்தையும் சிறை அதிகாரிகளையும் கோருகின்றனர்.
அதே நாளில், சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி, பாதுகாப்புச் சட்டங்களை, குறிப்பாக ஜாமீன் மறுக்கும் மற்றும் நீண்டகால தடுப்புக்காவலை அனுமதிக்கும் விதிகளை ரத்து செய்யவோ அல்லது திருத்தவோ அரசாங்கம் தயங்குவது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
பிப்ரவரி 8 அன்று சுங்கை பூலோ சிறைக்கு வெளியே உண்ணாவிரதம்
புத்ராஜெயாவின் தோல்வி காரணமாகச் சோஸ்மா கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
“(சோஸ்மா) திருத்தம் செய்வதற்கான திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால் இன்று வரை ஏன் எதுவும் செய்யப்படவில்லை?”
“அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தச் சட்டத்தில் சிக்கல்கள் இருப்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் அதிகாரிகள் எந்தத் தடையும் இல்லாமல் இதைப் பயன்படுத்த நீங்கள் ஏன் இன்னும் அனுமதிக்கிறீர்கள்?”
“எனவே, நாடாளுமன்றத்தில் திருத்தங்களைத் தாக்கல் செய்யும் வரை சோஸ்மா மீது தற்காலிக தடை விதிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொடூரமான விதிகள்
அந்தக் குறிப்பில், கடந்த காலத்தில் சோஸ்மா மிகவும் கடுமையானதாகவும் அடக்குமுறையாளராகவும் கருதப்பட்டதை சக பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கு லிம் நினைவூட்டினார்.
நீதிமன்றங்களுக்கு எந்த அணுகலும் இல்லாமல் விசாரணைக்காக 28 நாட்கள்வரை காவலில் வைக்க அனுமதிக்கும் சோஸ்மாவின் பிரிவு 4(5) தவிர; பிரிவுகள் 6, 13, 14 மற்றும் 30 ஆகியவை அதன் கொடூரமான தன்மை காரணமாகச் சிக்கலானவை என்று முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மற்றவற்றுடன், பிரிவு 13, ஒரு கைதியை விசாரணைவரை தொடர்ந்து காவலில் வைக்க உதவுகிறது, அதற்கு ஆதாரமில்லாத உண்மைகள் இருந்தபோதிலும் – பிரிவு 30, விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை மேல்முறையீடு செய்யும்போது, காவலில் வைக்க அரசு வழக்கறிஞரின் விண்ணப்பத்தை அனுமதிக்கிறது.
“உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில், சோஸ்மாவை எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்து திருத்த முடியும் என்று டிசம்பர் 2022 இல் உறுதியளித்திருந்தார்.
சுவராம் இயக்குனர் சிவன் துரைசாமி
“மேலும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஹராப்பானை சோஸ்மாவின் பிரிவு 4(5) ஐ மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதை நிராகரிக்க வெற்றிகரமாக வழிநடத்தியதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
மார்ச் 2022 இல் ஹராப்பான் இந்த விதியின் நீட்டிப்பைத் தடுக்க முடிந்தது, ஆனால் அப்போதைய அரசாங்கம் இறுதியில் அதே ஆண்டு ஜூலையில் அதை அங்கீகரிப்பதில் வெற்றி பெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நேற்று, புத்ராஜெயாவில் உள்ள உள்துறை அமைச்சக தலைமையகத்திற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்ததாகக் கூறி, சிவனை காவல்துறையினர் சிறிது நேரம் கைது செய்தனர்.
திங்கட்கிழமை, உள்துறை அமைச்சக பிரதிநிதிகளைச் சந்திக்க விரும்பிய 32 சோஸ்மா கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சிவனும் சுவாராம் திட்ட மேலாளர் அசுரா நஸ்ரோனும் சென்றிருந்த சம்பவம் தொடர்பாக இது நடந்தது.
இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஐடி ஷாம் முகமதுவும் உள்துறை அமைச்சகமும் சிவன் கைது செய்யப்பட்டதை மறுத்தாலும், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதாகச் சுவராம் தலைவர் கூறினார்.