தாக்குதல்குறித்து சோஸ்மா கைதிகளைக் காவல்துறையில் புகார் அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்துகிறது

தாக்குதல் நடத்தியதாகக் கூறிய பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் கைதுச் செய்யப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்குமாறு கிள்ளான் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கேள்விக்குரிய 32 கைதிகளில் 15 பேர் சார்பாகப் பேசும் வழக்கறிஞர் டி ஹர்பால் சிங், உயர் நீதிமன்ற துணைப் பதிவாளர் ஹிர்மான் அப் ரௌப் முன்னிலையில் இன்றைய வழக்கு நிர்வாகத்தில் தனது வாடிக்கையாளர்கள் தங்கள் வாக்குமூலங்களை வழங்கியபின்னர் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.

“எனது 15 வாடிக்கையாளர்களும் தாங்கள் எவ்வாறு தாக்கப்பட்டனர், அவர்களின் காயங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்குறித்து வாய்மொழி அறிக்கைகளை வழங்கினர்”.

“அவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்ற துணைப் பதிவாளர் பதிவு செய்தார்,” என்று நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஹர்பால் கூறினார்.

மேலும் சக வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், சுவராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

சோஸ்மா பிரிவுகீழ், கெங் டிஆர் என அறியப்படும் ஒரு குற்றக் குழுவுடன் தொடர்பு கொண்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன

பிப்ரவரி 13 அன்று, சுங்கை பூலோ சிறைச்சாலை வளாகத்தில் சோஸ்மாவின் கீழ் ஒரு கைதி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் நிராகரித்தார்.

நேற்று இந்த விவகாரம் தொடர்பாகக் கைதியின் மனைவி போலீசில் புகார் அளித்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில்

“இந்தச் செய்தி நேற்று வெளியானது, எனக்குப் பல கேள்விகள் வந்தன. முதல் கட்டமாக, இந்த விஷயத்தைப் பற்றிச் சரிபார்த்து, எனக்கு மீண்டும் அறிக்கை அளிக்கச் சிறைத்துறை ஆணையர் ஜெனரலை உடனடியாகத் தொடர்பு கொண்டேன்.

“தாக்குதல் ஒருபோதும் நடக்கவில்லை என்பதைக் குறிக்கும் முழு அறிக்கையும் எனக்குக் கிடைத்துள்ளது,” என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

தடுப்புக்காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம்

முன்னதாக, சுங்கை பூலோ சிறைச்சாலை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர் தனது வாடிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாக ஹர்பால் குற்றம் சாட்டினார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைக் கண்காணிப்பாளர் அங்கு வந்து பதட்டத்தைத் தணிக்குமாறு கேட்டுக் கொண்டதாக வழக்கறிஞர் கூறினார்.

“சிறையில் ஒரு கலவரம் ஏற்பட்டது, நிலைமையை அமைதிப்படுத்த நான் அழைக்கப்பட்டேன்”.

“ஆனால் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு சிறை வளாகத்திற்குள் நுழைந்தபோது, ​​அவர்களில் சிலர் தாக்கப்பட்டதையும், பலர் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதையும் நான் கண்டேன்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

இன்றைய நிகழ்வுகளை விரிவாகக் கூறிய ஹர்பால், அனைத்து கைதிகளையும் உடனடியாக மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

கிள்ளான் உயர் நீதிமன்ற வளாகம்

“அவர்களுக்குத் தேவையான உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சிறையில் அல்ல, சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற கைதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜேஷ், தனது வாடிக்கையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், உதைக்கப்பட்டதாகவும், குத்தப்பட்டதாகவும், பலமுறை தடியால் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

“இது மிகவும் கொடூரமானது. ஒரு நாகரிக நாட்டில் எந்தவொரு கைதியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தாக்கப்படக்கூடாது. அதிகாரிகள் இதை விசாரிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

கைதுச் செய்யப்பட்டவர்கள் புகார்களைத் தாக்கல் செய்வதில் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்றும், ஏனெனில் இது தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பாதிக்கக்கூடும் என்றும் ராஜேஷ் கவலை தெரிவித்தார்.

வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன்

இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்று சிவன் வலியுறுத்தினார்.

“சிறைச்சாலைத் துறை தற்காப்புடன் செயல்படுகிறது. குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்கக்கூட அவர்கள் கவலைப்படவில்லை,” என்று அவர் கேட்டார்.

கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக மருத்துவமனைக்கு விரைந்ததாகச் சிறை கண்காணிப்பாளர் கூறிய போதிலும், அவரது குழுவினர் அவர்களின் உடலில் காயங்களைக் கண்டறிந்ததாகச் சிவன் மேலும் கூறினார்.

“இன்று, நீதிமன்றம் எங்கள் வாதத்தைக் கேட்டுள்ளது, உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரது எதிர்வினை என்னவாக இருக்கும்?” என்று சிவன் கேட்டார்.

இந்த விவகாரத்திற்கு சிறைச்சாலைகள் துறை பொறுப்பேற்க வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை சுங்கை பூலோ சிறை இயக்குநரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வழக்கு நிர்வாகத்திற்காக நீதிமன்றம் ஏப்ரல் 17 ஐ நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் விசாரணை 2026 ஆம் ஆண்டுக்கு – அக்டோபர் 15 முதல் 30 வரையிலும், நவம்பர் 2 முதல் 6 வரையிலும், நவம்பர் 9 முதல் 22 வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.