வெளிநாட்டுத் தலைவர்கள் டாக்டர் மகாதிர் முகமதுவை சந்திப்பதைத் தடுத்ததை அன்வார் மறுக்கிறார்

பல வெளிநாட்டுத் தலைவர்கள் தன்னைச் சந்திப்பதை அரசாங்கம் தடுத்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கூறியதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.

சமீபத்தில் ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்கள் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வருகை செய்தபோதிலும், முன்னாள் பிரதமரைச் சந்திக்க யாரும் கோரவில்லை என்று அன்வார் சுட்டிக்காட்டினார்.

“எந்த வெளிநாட்டுத் தலைவர் அவரைச் சந்திக்க விரும்புகிறார்? அவர்கள் அவரைச் சந்திக்க விரும்பினால், என்ன பிரச்சினை? அவரது பழைய நண்பர்கள் அவரைச் சந்திக்க விரும்பினால், எந்தப் பிரச்சினையும் இல்லை.”

“சமீபத்தில், தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் துர்க்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மலேசியாவிற்கு வருகை புரிந்தனர், ஆனால் யாரும் அவரைச் சந்திக்கக் கோரவில்லை. அவர்கள் சென்றிருந்தால், நான் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். அவர்கள் அவரைச் சந்திக்க சுதந்திரமாக இருக்கிறார்கள், அதில் எந்தத் தவறும் இல்லை,” என்று பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் சல்மான் ஹமத் அல் கலீஃபாவின் அழைப்பின் பேரில் பஹ்ரைனுக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்தபின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாகப் பெர்னாமா மேற்கோள் காட்டியது.

‘அவர்கள் என்னைப் பார்க்க விரும்பினர் ஆனால் முடியவில்லை’

சமீபத்தில், பல வெளிநாட்டுத் தலைவர்கள் தன்னைச் சந்திப்பதை அன்வார் தடுத்ததாக மகாதிர் கூறினார்.

“இரண்டு அல்லது மூன்று நாடுகளைச் சேர்ந்த சில வெளிநாட்டுத் தலைவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினர், ஆனால், அவர்களால் முடியவில்லை”.

“இந்தத் தலைவர்கள் என்னுடைய நண்பர்கள்; அவர்களுக்கு என்னைத் தெரியும். அவர்கள் மலேசியாவுக்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினர், ஆனால், அவர்களால் முடியவில்லை. எனவே, அவர்தான் எல்லா உறவுகளையும் துண்டிக்கிறார்,” என்று மகாதிர் ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் குற்றம் சாட்டினார்.

மகாதீரின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அன்வார் வலியுறுத்தினார்.

“அவர் ஒவ்வொரு நாளும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறுகிறார், ஆனால் அவரது குழந்தைகளுக்கு ரிம1 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. அது ஒரு குற்றச்சாட்டு அல்ல, இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம்,” என்று அவர் கூறினார்.

பாலஸ்தீனக் காரணம்

அடக்குமுறை மற்றும் மிருகத்தனத்தை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர்களின் தேசத்தின் அவல நிலையை மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அன்வார் கூறினார்.

அமெரிக்காவிடமிருந்து பழிவாங்கலைத் தவிர்க்க ஹமாஸ்-இஸ்ரேல் பிரச்சினையில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகக் கூறும் ஒரு சர்வதேச ஊடக அறிக்கைக்குப் பதிலளித்த அன்வார், மலேசியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்று வலியுறுத்தினார்.

“எங்களுக்கு எங்கள் நிலைப்பாடு உள்ளது, அதைப் பல்வேறு தளங்களில் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளோம். நாங்கள் யாரையும் எதிர்க்கத் தேர்வு செய்யவில்லை, ஆனால் எங்கெல்லாம் அடக்குமுறை மற்றும் கொடுமை உள்ளதோ, அங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க நாங்கள் நிற்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.