“படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” 24 மணி நேரத்தில் காணாமல் போயினர்

“படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” – வாக்காளர் பட்டியலில் ஒரு முறைக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள்- பற்றிய தகவல்கள் கண்டு பிடிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அந்த “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை” பட்டியலிலிருந்து அகற்றியுள்ளது.

என்றாலும் ஒரே ஒரு “படியாக்கம்” மட்டும் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் தேசியப் பதிவுத்துறையும் பதில் சொல்வதற்கு இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன.

வாக்காளர் பட்டியலில் ஏழு வாக்காளர்களின் படியாக்கங்கள் பற்றி மலேசியாகினி நேற்று செய்தி வெளியிட்டது. அந்த எழுவருக்கும் ஒரே பெயர், ஒரே பழைய அடையாளக் கார்டு எண் இருந்தன. ஆனால் படியாக்கபட்டவர்களுக்கு வேறு மை கார்டு எண் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை காணப்பட்டது வாக்காளர் பதிவைச் சரி பார்க்கும் முறையின் கீழ் தெரிய வந்தது. அதனால் அவர்கள் எந்த ஒரு தேர்தலிலும் இரண்டு முறை வாக்களிக்க இயலுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இன்று தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் சோதனை செய்த போது “படியாக்கம் செய்யப்பட்டவர்கள்” காணப்படவில்லை.

தேர்தல் ஆணையம் அன்றாட அடிப்படையில் வாக்காளர் பட்டியலை “தூய்மைப்படுத்தி வருவதாக” தொடர்பு கொள்ளப்பட்ட போது தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் யூசோப் கூறினார்.

“அலிஸ் என்ற இணைப்பு முறையாக வழியாக தேசியப் பதிவுத் துறையிடமிருந்து பெறப்படும் அதிகாரத்துவ தகவல்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலின் உள்ளடக்கத்தைத் திருத்தும் அல்லது நீக்கும்”, என அவர் குறுஞ்செய்தி வழி தெரிவித்தார்.

“இரட்டைப் பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேசியப் பதிவுத்துறை உறுதி செய்வதைப் பொறுத்து செயல்படாத ( active ) பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கும். அந்த நடவடிக்கை தொடரும்”, என்றும் அவர் சொன்னார்.