பி. இராமசாமி, தலைவர், உரிமை – ம இ கா துணைத்தலைவர் எம். சரவணன், ஹிந்து கோயில்களுக்கு “சட்டவிரோதம்” என்ற அவமதிப்பு வார்த்தையை பயன்படுத்தாதிருக்க அரசு துறைகளுக்கு உத்தரவிட பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் சொற்ப மற்றும் தாமதமான வேண்டுகோளாகும்.
இத்தகைய கோரிக்கையைச் செய்கிற நேரம் மற்றும் அதன் இயல்பு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
முதலாவதாக, இந்தக் கோரிக்கையை முழு அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் அலுவலகம் மூலமாக, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் வழியாக ஒரு எளிய உத்தரவு போதுமானதாக இருக்கும்.
ஆனால் இது, நீண்ட காலமாக நிலவி வரும் அநீதி ஒன்றை திருத்துவதை நாடும் மனப்பான்மையை உயர் மட்டத்தில் இருந்து எதிர்பார்க்கும் நிலையில் தான் பார்கப்பட வேண்டும்— ஆனால் அதுபோன்ற எண்ணம் இன்னும் தென்படவில்லை.
இதை விட கவலையூட்டுவது, சரவணன் அவர்களின் கோரிக்கை, இவ்வாறான “சட்டவிரோதம்” என்ற முத்திரையை ஆரம்பத்தில் வழக்கமாக்கிய ஒருவரிடம் தான் விடுக்கப்படுகிறது என்பதே. அன்வார் இப்ராகிம், மச்ஜித் இந்தியாவில் உள்ள 130 ஆண்டுகள் பழமையான தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலின் கட்டாய இடமாற்றத்தின் போது இந்த வார்த்தையை சட்டபூர்வமாகப் பயன்படுத்தியவராக இருக்கிறார்.
அந்தக் கோயில் மச்ஜித் மடானி கட்டிடத் திட்டத்துக்காக இடம்பெயரச் செய்யப்பட்டது. அன்வாரின் நியாயம், அந்த கோயிலின் “சட்டவிரோத” நிலையைக் குறித்தே இருந்தது.
அந்தச் செயல், அரசுத் துறைகளுக்கு ஒரு கடுமையான செய்தியைத் தந்தது — ஹிந்து கோயில்களை “சட்டவிரோதம்” என அழைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது மட்டுமல்ல, அதற்கு உச்ச அதிகாரத்திலிருந்தே ஒப்புதல் உள்ளது என்பதைக் காட்டியது.
இதன் விளைவாக, அந்த வார்த்தை ஒரு வாடிக்கையான அரசியல் மற்றும் நெறிமுறை கருவியாக மாற்றப்பட்டுள்ளது.
இது வரலாற்றுத் தவரோ சட்டத் தெளிவின்மையாலோ அல்ல, ஆனால் இந்து கோயில்களின் சட்டபூர்வத்தன்மையை மறுக்கவும் பெரும்பான்மையினர் சார்ந்த மத உணர்வுகளை திருப்திப்படுத்தவும் கூடிய ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே பயன்படுத்தப்படுகிறது.
இக்கோயில்கள் பலவும், நவீன நிலச் சட்டங்களுக்கும், நில பதிவு முறைக்கும், தேசிய நிலக் குறியீட்டுக்கும் முன்பே நிறுவப்பட்டவை.
இவை பெரும்பாலும் பிரிட்டிஷ் காலத்திய தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடியேறியோர் அமைத்தவை. நில உரிமை கிடைக்காத நிலையிலும், ஆன்மீக மற்றும் சமூக தேவைகளுக்காக நிறுவப்பட்ட இவையெல்லாம் இன்று “சட்டவிரோதம்” என அழைக்கப்படுவது வரலாற்றுப்பூர்வமான தவறும், ஒழுக்க ரீதியான அநீதியும் ஆகும்.
இது ஒரு சமூகத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் மத உரிமைகளையும் நிராகரிக்கும் அரசியல் மறுப்பை பிரதிபலிக்கிறது. ஒரு சாதாரண நிர்வாகச் சிக்கலாகக் கருதி, பல தலைமுறைகளாக நிலவி வந்த மத வழிபாட்டை அழிக்கும் முயற்சியாகவும் இது உள்ளது.
ஒருகாலத்தில் இந்திய சமூகத்தின் வலிமையான குரலாக இருந்த ம இ கா, இன்று ஒரு பலவீனமான மற்றும் எதிர்வினை அளிக்கும் நிலையில் இருக்கிறது. ஆயர்கூனிங் இடைத்தேர்தலைத் தொடர்ந்து, மீண்டும் சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் நோக்கத்தில் சரவணன் எடுத்துள்ள முயற்சி, அவர்களையே நீண்டகாலமாக புறக்கணித்து வந்ததோர் ஆட்சியிடம் இருந்து சிறு உதவிகளை நாடும் செயல் எனத் தோன்றும் அபாயம் உள்ளது.
தங்களின் மிகக் கடினமான தருணங்களிலும், ம இ கா தலைவர்கள் தங்களுடைய மரியாதையையும் தைரியத்தையும் காக்க வேண்டும்.
அநீதிகளை ஏற்படுத்தும் ஆட்சி அமைப்புகளிடம் இருந்து அனுமதி நாடும் மனப்பான்மையை விடுத்து, சமூகத்தின் உரிமைகள் மற்றும் பாரம்பரியத்துக்காக உறுதியான, தயக்கமற்ற நிலைப்பாடு தேவைப்படுகிறது.
“சட்டவிரோதம்” என்ற வார்த்தை வெறும் சொற்களாகவே அல்ல, ஒட்டுமொத்த அமைப்பு முறையிலும் எதிர்க்கப்பட வேண்டும். எதுவும் மாற்றமின்றி கைத்தட்டும் அறிவிப்புகள் அல்ல, நாட்டின் மக்களுக்கான உரிமையை எவ்வாறு அணுகுகிறோம் என்பதற்கான ஒரு தேசிய சிந்தனை மாற்றமே தேவை.
பல்வகை மதங்களைப் பற்றி பேசும் அரசாங்கம், அதன் வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்படுவதும், உண்மையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்வதும் அவசியம்.