எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், பெட்ரோனாஸ் நிறுவனத்தின் லாபச் சரிவையும் அதன் ஊழியர்களின் நலனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அரசாங்கம் ஏன் லாபப்பங்குகளை கோருகிறது என்று கேட்டார்.
இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கம் நிறுவனத்தை லாபத்தொகைக்காக “அழுத்தியிருக்காவிட்டால்” பெட்ரோனாஸின் மறுசீரமைப்பைத் தவிர்த்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
அரசாங்கம் இதற்கு ஒரு பகுத்தறிவு விளக்கத்துடன் பதிலளிக்க வேண்டும், ஏனெனில் இது நியாயமான நிதி மேலாண்மையா என்பதை அறிய மலேசியர்களுக்கு உரிமை உண்டு என்று அவர் மேலும் கூறினார்.
“ஆச்சரியம் என்னவென்றால், பெட்ரோனாஸின் லாபம் மிகவும் சரிந்த சூழ்நிலையில், அரசாங்கம் 2024 ஆம் ஆண்டைப் போலவே, 2025 ஆம் ஆண்டிற்கும் அரசாங்கத்திற்கு ரிம 32 பில்லியன் லாபத்தொகையை வழங்கப் பெட்ரோனாஸை அழுத்தியது”.
“ஆனால், அரசு பெற்றோனாஸை அழுத்தாமல், பெற்றோனாஸின் தற்போதைய லாப நிலைமைக்கு ஏற்ப அதன் லாபப்பங்கீட்டு விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், மக்களைப் பாதிக்கும் இந்த மறுசீரமைப்பைத் தவிர்த்திருக்கலாம்,” என்று ஹம்சா கூறினார்.
நேற்று, பெட்ரோனாஸ் தலைவரும் குழும தலைமை நிர்வாக அதிகாரியுமான தெங்கு தௌஃபிக் தெங்கு கமாட்ஜாஜா அஜீஸ், கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாலும், எதிர்பாராத சந்தை ஏற்ற இறக்கங்கள் அதன் லாபத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தாலும் செலவுகளைக் குறைக்க நிறுவனம் தனது பணியாளர்களைச் சுமார் 10 சதவீதம் குறைக்கும் என்று கூறினார்.
இது 5,000 க்கும் மேற்பட்ட மக்களைப் பாதிக்கும் என்று ப்ளூம்பெர்க் அவரை மேற்கோள் காட்டி கூறியது.
நிறுவன அளவிலான மறுசீரமைப்பைத் தவிர, அனைத்து பதவி உயர்வுகளும் பணியமர்த்தல்களும் டிசம்பர் 2026 வரை முடக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
அந்த அறிக்கையின்படி, பெட்ரோனாஸின் லாபம் கடந்த ஆண்டு 21 சதவீத சரிவுக்குப் பிறகு 32 சதவீதம் குறைந்துள்ளது.
இன்று முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம், மறுசீரமைப்பு பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றார்.
ஆனால் பெர்சத்து துணைத் தலைவர் ரட்ஸி ஜிடின், ஒப்பந்த ஊழியர்களாக இருந்தாலும் சரி, நிரந்தர ஊழியர்களாக இருந்தாலும் சரி, வேலை இழப்புகள் அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் என்று பதிலளித்தார்.